சாணக்கியனின் புதிய தனிநபர் பிரேரணையை நிறைவேற்ற வேண்டும்: தமிழ்க்கட்சிகள் வலியுறுத்தல்
2023 இல் சமர்ப்பித்த மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் குறித்த தனிநபர் பிரேரணை முதலாம் வாசிப்பைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

மாகாணசபை முறைமையை முற்றாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதற்கு இடமளிக்காமல் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டியது அவசியமென வலியுறுத்தினர்.
அதுமாத்திரமன்றி தற்போது இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டம் தொடர்பான தனிநபர் பிரேரணையானது ஏற்கனவே 2023 இல் தேசிய மக்கள் சக்தி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட அதே தனிநபர் பிரேரணை தான் எனச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஆகவே சாணக்கியனின் தனிநபர் பிரேரணை குறித்து ஆராயவேண்டும் என காலத்தை இழுத்தடிக்காமல் அரசாங்கம் அதனை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.
மாகாணசபைத்தேர்தலை நடத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாணசபைத்தேர்தல் விவகாரத்தில் சட்ட ரீதியான சில தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டியுள்ளது. அதன்படி அமைச்சு மட்டத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் 2017 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மாகாணசபைத்தேர்தல் திருத்தச்சட்டமூலம் மற்றும் மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணை என்பன தொடர்பில் விசேட அவதானம்செலுத்தி ஆராய்ந்து வருகிறோம். இதுகுறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படைத்தன்மையுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என மாகாணசபைகள், உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் இந்நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை 3 வருடங்களுக்குப் பிற்போட்டிருக்கும் நிலையில், சுமார் 6 வருடங்களாக இயங்காமல் இருக்கும் மாகாணசபைகளை அரசியலமைப்பின் பிரகாரம் இயங்கச்செய்வதற்கு ஏற்றவாறு மாகாணசபைத்தேர்தல்களையேனும் உடனடியாக நடத்தவேண்டுமமென வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி மாகாணசபைத்தேர்தல் சட்டத்தில் சிறியதொரு திருத்தத்தையே மேற்கொள்ளவேண்டியிருப்பதாகவும், அதனைக் காரணங்காட்டி தேர்தலைத்த தொடர்ந்து தாமதப்படுத்தக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு தான் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை, பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் விளைவாக வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை எனவும், இருப்பினும் 2023 ஆம் ஆண்டில் மீண்டும் அதனையே தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்ததாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
'2023 இல் சமர்ப்பித்த மாகாணசபைத்தேர்தல் சட்டத்திருத்தம் குறித்த தனிநபர் பிரேரணை முதலாம் வாசிப்பைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. அதனையடுத்து உயர்நீதிமன்றத்தினால் குறிப்பிடப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அப்பிரேரணை தேசிய மக்கள் சக்தி உள்ளடங்கலாக சகல தரப்பினரதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் மூன்றாம் வாசிப்பு நிகழ்ச்சிநிரலில் இருந்து நீக்கப்பட்டதன் விளைவாகவே அப்போதும் அப்பிரேரணையை நிறைவேற்றமுடியவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் அந்தப் பிரேரணையே தற்போது இரா.சாணக்கியனால் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் காரணமாக, அதுகுறித்து மீண்டும் புதிதாக ஆராயவேண்டிய அவசியமில்லை. மாறாக அதனை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
அதேவேளை இதுகுறித்து கருத்து வெளியிட்ட இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், மாகாணசபைகள் இயங்கினால் தான் அவை செயற்திறன்மிக்கவை என்றோ அல்லது அவற்றால் எந்தவொரு பயனும் இல்லை என்றோ எதேனுமொரு தீர்மானத்துக்கு வரமுடியும் எனவும், ஆகையினால் இனினும் தாமதமின்றி மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்தோடு கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், நடைமுறையில் அவை முழுமையாக வழங்கப்பட்டிருக்கவில்லை எனக் குறிப்பிட்ட சிறிதரன், மாகாணசபைகளை இயங்கச்செய்வதன் ஊடாகவே அவற்றின் இயலுமையை மதிப்பிடமுடியும் என்றார்.
மேலும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தமோ அல்லது அதனூடாகக் கொண்டுவரப்பட்ட மாகாணசபைகளோ தமிழர்களுக்கான முழுமையான அரசியல் தீர்வு அல்ல என்பதே சகல தமிழ்த்தேசிய கட்சிகளினதும் பொதுவான நிலைப்பாடு எனச் சுட்டிக்காட்டிய புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், இருப்பினும் அதனைக் கைவிடுவது தற்போதுள்ள அற்பசொற்ப அதிகாரப்பரவலாக்கத்தையும் இல்லாமல் செய்துவிடும் என்று எச்சரித்தார்.
அவ்வாறு மாகாணசபைகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கே சிங்கள தேசியக் கட்சிகள் விரும்புவதாகவும், எனவே அதற்கு இடமளிக்காமல் மாகாணசபைத்தேர்தலை உடனடியாக நடத்துமாறு அழுத்தம் பிரயோகிக்கவேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.