டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத வற் வரியை இடைநிறுத்துவதே உகந்தது; பொருளியலாளர் தலால் ரபி
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி, இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் டிஜிட்டல் சேவைகளுக்கான 18 சதவீத பெறுமதிசேர் வரி விதிப்பை இலங்கை இடைநிறுத்தி வைப்பதே உகந்ததாகும். ஏனெனில் அது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிந்தால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருக்கும் 30 சதவீத தீர்வை வரிக்கு மேலதிகமாக மேலும் 18 சதவீத வரி விதிக்கப்படும்.வெறுமனே 32 மில்லியன் டொலர்களை பெற முயன்று 3000 மில்லியன் டொலர்களை இழப்பதென்பது சிறப்பானதொரு விடயமல்ல என பிரபல பொருளியலாளர் தலால் ரபி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட 44 சதவீத பரஸ்பர தீர்வை வரி, இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இத்தீர்வை வரிக்குறைப்பு போதுமானதல்ல எனவும் இதன் விளைவாக நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படுமெனவும் தனது எக்ஸ் தளப்பதவில் சுட்டிக்காட்டியுள்ள பொருளியலாளர் தலால் ரபி,இதுபற்றி மேலும் கூறியிருப்பதாகவது,
அமெரிக்காவின் 30சதவீத பரஸ்பர தீர்வை வரி விதிப்பு இலங்கை மீது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்க இறக்குமதிகளுக்கான சுங்க வரியை நீக்குவற்கேனும் இலங்கை உடன்பட்டிருக்க வேண்டும். அமெரிக்க பொருட்களுக்கான சகல வரிகளையும் நீக்கியதன் விளைவாக வியட்நாம் 20 சதவீத பரஸ்பர தீர்வை வரியை பெற்றுக்கொண்டது.
அமெரிக்காவிடமிருந்து இலங்கை மேற்கொள்ளும் இறக்குமதிகள் 50 சதவீதத்தினால் அதிகரித்தாலும் எமது நடைமுறைக்கணக்கில் ஏற்படும் தாக்கம் 300 மில்லியன் டொலர்களை விடவும் குறைவானதாகவே இருக்கும். ஆனால் அமெரிக்காவுக்கான எமது ஏற்றுமதிகள் வெறுமனே 25 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தால் எமது நடைமுறைக் கணக்கில் 750 மில்லியன் டொலர்கள் சரிவு ஏற்படும்.எனவே வியட்நாமை போன்று நாமும் வரிகளை குறைப்பதற்கு இணங்கியிருந்தால் 30 சதவீதத்தைவிட குறைவான பரஸ்பர தீர்வை வரியை பெற்றிருக்க முடியும். ஆனால் தற்போதைய இந்த தீர்வை வரி நிர்ணயம் அமெரிக்க பொருட்களுக்கான கேள்வியில் சரிவை ஏற்படுத்தும்.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கை டிஜிட்டல் சேவைகளுக்கான 18சதவீத பெறுமதிசேர் வரியை இடைநிறுத்தி வைப்பதே உகந்ததாகும். அவ்வரி மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வெறுமனே 0.04 சதவீத வருமான பங்களிப்பே கிடைக்கும். இருப்பினும் இந்த வரி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு மிக நெருக்கமான கூகுள்,பேஸ்புக் மற்றும் அமேசன் ஆகிய நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும்.
அமெரிக்க பொருட்களுக்கு புதிய வரிகளை நிர்ணயிக்கும் நாடுகள் அதே அளவு வரி விதிப்புக்கு உள்ளாகுமென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.எனவே இந்த 18 சதவீத பெறுமதிசேர் வரி குறித்து ட்ரம்ப் அறிந்தால் இலங்கைக்கு மேலும் 18 சதவீத வரி விதிக்கப்படும்.அது இலங்கை அமெரிக்காவுக்கு மேற்கொள்ளும் 3 பில்லியன் டொலர்கள் ஏற்றுமதிகளை முழுமையாக பாதிக்கும்.
வெறுமனே 32 மில்லியன் டொலர்களை பெற முயன்று 3000 மில்லியன் டொலர்களை இழப்பதென்பது சிறப்பானதொரு விடயமல்ல,
அதேபோன்று நாம் பிரிக்ஸ் அமைப்பில் இணைவது குறித்து இப்போது பேசக்கூடாது. அதில் இணைவதற்கு பல வருடங்களாகும் எனினும் அது அமெரிக்காவினால் மேலும் 10 சதவீத வரி விதிக்கப்படுவதற்கான அச்சுறுத்தலை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.