புதிய முதலீட்டாளர்களை அதிகளவில் கவர வேண்டும்; சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சங்கம்
ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 44 சதவீத வரி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கடும் நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிட்டிருக்கும்.

அமெரிக்கா அறிவித்துள்ள புதிய வரி நிலைமை தொழில் பாதுகாப்பு பிரச்சினை பாரியளவில் ஏற்படுத்தாது. ஆனால் புதிய முதலீட்டாளர்களை அதிகளவில் கவர வேண்டிய தேவை காணப்படுகிறது. எனவே அரசாங்கம் அதற்குரிய துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று சுதந்திர வர்த்தக வலய முதலீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் தம்மிக பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட 44 சதவீத வரி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கடும் நெருக்கடிகளை எதிர் கொள்ள நேரிட்டிருக்கும். எவ்வாறிருப்பினும் தற்போது அது 30 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால் இலங்கைக்குள்ள போட்டி நிலைமை உயர்வடைந்துள்ளது. எனினும் சிறியளவில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு ஏற்படக் கூடும்.
புதிய நிலைவரத்தின் அடிப்படையில் தொழில் பாதுகாப்பு பிரச்சினை பாரியளவில் ஏற்படாது. ஆனால் புதிய முதலீட்டாளர்களை அதிகளவில் கவர வேண்டிய தேவை காணப்படுகிறது. எனவே அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டியதும் அவசியமாகும். அரசாங்கம் இது தொடர்பில் நேர்மறையாக சிந்தித்து கொள்கை ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கின்றோம்.
ஏற்றுமதி தொழிற்துறைகளில் தொழிநுட்பத்தை மேம்படுத்துவது குறித்து உரிய தரப்பினர் அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் உலக நாடுகளின் துரித அபிவிருத்தி எமக்கு சவாலானதாக அமையும். ஆடை தொழிற்துறையில் மூலப்பொருள் உற்பத்தியாளர்கள் நாட்டில் உள்ளனர். எனவே அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் பட்சத்தில் அதன் ஊடாகவும் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.
ஆடை தொழிற்துறை மாத்திரமின்றி ஏனைய துறைகளிலும் மூலப்பொருள் உற்பத்தி முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் ஏற்றுமதி தொழிற்துறையினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.