வரி திருத்தத்துக்கான யோசனைகளை அமெரிக்காவிடம் முன்வைப்போம்; நிதியமைச்சின் செயலாளர்
அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியபெரும வருமாறு குறிப்பிட்டார்,

ஆசிய வலய நாடுகளுக்கு விதிக்கப்படும் தீர்வை வரி வீதத்தை அவதானித்து தற்போது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத தீர்வை வரி திருத்தத்துக்கான யோசனைகளை அமெரிக்காவிடம் முன்வைப்போம். 30 சதவீத தீர்வை வரி அமுல்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை முகாமைத்துவம் செய்வற்கு அமைச்சு மற்றும் துறைசார் நிறுவன மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரிய பெரும தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விசேட ஊடகச் சந்தில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த உலங்கமுவ மற்றும் வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் விமலேந்திர ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
அமெரிக்காவினால் அறிவிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியபெரும வருமாறு குறிப்பிட்டார்,
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டத்துக்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை செயற்படுத்தி வருகின்ற நிலையில்,அமெரிக்காவினால் இலங்கைக்கு அண்மையில் 44 சதவீதமளவில் பரஸ்பர தீர்வை வரி விதிக்கப்பட்டது.
இந்த தீர்வை வரியை அமுல்படுத்தினால் இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம் மிக மோசமான பாதிப்புக்களை எதிர்க்கொள்வதுடன், தேசிய மட்டத்திலான தொழிற்றுறைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கு மிக மோசமான பாதிப்பு ஏற்படும் நிலை காணப்பட்டது.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பரஸ்பர தீர்வை வரி தொடர்பில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.இந்த பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக இலங்கைக்கான பரஸ்பர தீர்வை வரி 30 சதவீதமான அமெரிக்க ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 சதவீத வரி குறைப்பு சாதகமானதொன்றாகும்.
ஒரு துறையை மாத்திரம் கருத்திற்கொள்ளாமல் சகல துறைகள் குறித்து அவதானம் செலுத்தி தான் தீர்வை வரி விவகாரத்தில் பேச்சுவார்தையில் ஈடுபட்டோம். 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய வலய நாடுகளுக்கு விதிக்கப்படும் தீர்வை வரி வீதத்தை ஆராய்ந்து தற்போது விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத தீர்வை வரி திருத்தத்துக்கான யோசனைகளை அமெரிக்காவிடம் முன்வைப்போம். அமெரிக்காவின் புதிய பரஸ்பர தீர்வை வரி இலங்கையின் ஆடை உற்பத்திக்கு நேரடியாக செல்வாக்கு செலுத்தும்.ஆடை உற்பத்தியில் இருவேறுப்பட்ட வகையில் தீர்வை வரி அறவிடப்படுகிறது. ஆகவே சகல தொழிற்றுறையுடன் கலந்துரையாடி வரி திருத்த யோசனையை முன்வைப்போம்.
இலங்கையை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமெரிக்கா பரஸ்பர தீர்வை வரியை விதிக்கவில்லை என்பதை குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.பூகோள காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த நெருக்கடிக்கு ஒருமித்த தன்மையில் தீர்வு காண வேண்டும்.
30 சதவீத தீர்வை வரி அமுல்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகளை முகாமைத்துவம் செய்வற்கு அமைச்சு மற்றும் துறைசார் நிறுவன மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த நெருக்கடிக்கு சிறந்த முறையில் தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.