அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்: கலாநிதி ஹர்ஷ டி சில்வா
550 000 தொழிலாளர்கள் மறைமுகமாக இத்துறையுடன் தொடர்புடையவர்களாகவுள்ளனர். எனவே நாம் அரசியலை புறந்தள்ளி நாட்டுக்காக முன்வர வேண்டும்.

இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியை 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனை சிறந்த ஆரம்பமாகக் கருதி மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியலுக்கு அப்பால் இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
விசேட அறிக்கையொன்றை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியை 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் ஓரளவு வெற்றியை அவதானிக்க முடிகிறது. காரணம் சில நாடுகளுக்கு எம்மை விட அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையும் போட்டித்தன்மைக்குள் உள்வாங்கப்பட வேண்டுமெனில் எம்முடன் போட்டியிடும் அமெரிக்காவின் சந்தையிலுள்ள ஏனைய நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி தொடர்பில் சிந்திக்க வேண்டும்.
எம்முடன் அதிக போட்டி தன்மை கொண்ட நாடு வியட்நாம் ஆகும். அதனையடுத்து பங்களாதேஷ் காணப்படுகிறது. வியட்நாமுக்கு 20 சதவீதமும், பங்களாதேஷூக்கு 35 சதவீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் தற்போதும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறது. வியட்நாம் 20 சதவீதத்தை உறுதிப்படுத்தியுள்ளது. நாம் இந்த விவகாரத்தை அரசியலுக்கு அப்பால் நோக்குகின்றோம்.
இது ஜே.வி.பி. அரசாங்கமா அல்லது ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமா என்பது எமது கவலையல்ல. அனைத்து தரப்பினரும் ஏற்றுமதி தொழிற்துறையுடன் தொடர்புபட்டுள்ளனர். 360 000 தொழிலாளர்கள் ஆடை ஏற்றுமதித்துறையை சார்ந்தவர்களாகவுள்ளனர். மேலும் 550 000 தொழிலாளர்கள் மறைமுகமாக இத்துறையுடன் தொடர்புடையவர்களாகவுள்ளனர். எனவே நாம் அரசியலை புறந்தள்ளி நாட்டுக்காக முன்வர வேண்டும்.
எனவே தான் எம்மிடமிருந்து ஏதேனுமொரு ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாயின் அதனை வழங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாக நாம் இதற்கு முன்னரே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தெரிவித்திருந்தோம். எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்தவகையிலும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நாம் தற்போது மலை உச்சியில் நிற்கின்றோம். ஒருபுறம் சாய்ந்தால் விழுந்து விடுவோம். மறுபுறம் சென்றால் மீள முடியும். கிடைத்துள்ள இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு நன்மையைப் பெற்றுக் கொள்வோம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
மீண்டும் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். எதிர்க்கட்சி என்ற ரீதியில் அதிகபட்ச ஒத்துழைப்பினை வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம். அரசியலுக்கு அப்பால் நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பமாகவே நாம் இதனைக் காண்கின்றோம். இதனை பாரிய வெற்றியாகக் கருதி அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு செல்லாதிருப்பதை விட, சிறந்த ஆரம்பமாகக் கருதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம் என்றார்.