மாகாணசபைத்தேர்தலை காலந்தாழ்த்த கூடாது; சமூக நீதிக்கான தேசிய இயக்கம்
அதுமாத்திரமன்றி நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்கோரிவரும் மக்களின் அபிலாஷைகளைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இது மிகமோசமான நிலைமையாகும்.

மாகாணசபைத்தேர்தல் முறைமையில் நிலவும் சிக்கல் குறித்து அவதானம் செலுத்தவேண்டியது மிக அவசியமாகும். தேவையேற்படின், ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எது எவ்வாறெனினும், எந்தவொரு விடயத்தையும் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைக் காலந்தாழ்த்துவதற்கான காரணமாகப் பயன்படுத்தக்கூடாது என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரச இயந்திரத்தின்கீழ் மக்கள் பிரதிநிதிகளைக்கொண்ட கட்டமைப்புக்களில் மாகாணசபைகள் தவிர்ந்த ஏனைய சகல கட்டமைப்புக்களும் தற்போது இயங்குநிலையில் உள்ள பின்னணியில், மாகாணசபைகளைத் தொடர்ந்தும் நிறைவேற்றதிகார நிர்வாகத்தின்கீழ் வைத்து, மக்கள் பிரதிநிதிகள் தெரிவை முடக்குவது என்பது அரசியலமைப்புக்கு முரணானது மாத்திரமன்றி, மக்களின் ஆணை வழங்கல் அதிகாரத்தையும் பறிப்பதாகவே அமையும்.
ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் இவ்விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவேண்டும். அதற்கமைய மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.
மாகாணசபைத்தேர்தல்கள் இறுதியாக 2014 ஆம் ஆண்டிலேயே நடாத்தப்பட்டன. அதன்படி 2018 ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை நாட்டிலுள்ள எந்தவொரு மாகாணசபையிலும் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. மாறாக ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரின் கீழான நிர்வாகமே தற்போது இடம்பெற்றுவருகின்றது. இது ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானதாகும்.
தற்போது ஆட்சிபீடத்தில் இருக்கும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் சகல மாகாணசபைகளுக்குமான தேர்தல் நடாத்தப்படவேண்டும். இருப்பினும் அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு அதற்குத் தடையாகவுள்ள காரணிகளை அரசாங்கம் அடையாளம் கண்டிருக்கவேண்டும்.
அதுமாத்திரமன்றி நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக்கோரிவரும் மக்களின் அபிலாஷைகளைக் கருத்திற்கொண்டு நோக்குகையில், இது மிகமோசமான நிலைமையாகும்.
இவ்வாறானதொரு பின்னணியில் மாகாணசபைத்தேர்தல் முறைமையில் நிலவும் சிக்கல் குறித்து அவதானம் செலுத்தவேண்டியது மிக அவசியமாகும். அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனை பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரால் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
அதுமாத்திரமன்றி தேவையேற்படின், ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளலாம். எது எவ்வாறெனினும், எந்தவொரு விடயத்தையும் உரிய காலப்பகுதியில் நடாத்தப்படவேண்டிய மாகாணசபைத்தேர்தல்களைக் காலந்தாழ்த்துவதற்கான காரணமாகப் பயன்படுத்தக்கூடாது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.