புதிய அரசியலமைப்புக்கான பணிகள் ஆரம்பம்: பிரதமர் அறிவிப்பு
அரசாங்கம் வரைபு செய்யப்படும் புதிய அரசியலமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைபு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசியலமைப்பாக அமையும்.

புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 25-07-2025 அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் மேற்கொள்வது யாத்தியப்படாத ஒன்றாகும்.
விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள்,சட்டங்கள், ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அதனால் எமது அரசாங்கம் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதனால் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்கு திறந்துவிடப்பட வேண்டும், அதேபோன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும்.
அதன் பிரகாரம் அரசாங்கம் வரைபு செய்யப்படும் புதிய அரசியலமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைபு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசியலமைப்பாக அமையும்.
அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசியலமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, ஆழமாக ஆராய்ந்து தயாரிப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் இதற்காக சில காலம் தேவைப்படும். எமது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒருவருடம் செல்லவும் இல்லை. இன்னும் எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்பட தேவையில்லை. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்றார்.