ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை இழப்பு: சிவஞானம் சிறீதரன்
தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரா. சம்பந்தனின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 25-07-2025 அன்று இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய,டபிள்யூ, ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்..
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான அமரர்.இராஜவரோதயம் சம்பந்தன் காலமாகி ஒருவருடம் நிரம்பியுள்ள சூழலிலும், அவரது மறைவினால் தமிழ்த்தேசிய அரசியற் தளத்தில் ஏற்பட்ட இடைவெளியை உணர்ந்த ஒருவனாக, இந்தச் சபையில் அவரின் மறைவுக்கான ஆழ்ந்த துக்கத்தையும் மரியாதையுடனான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விடுதலைப் போராட்ட மௌனிப்பின் பின்னர் திக்குத் தெரியாதிருந்த ஈழத்தமிழர்களின் அரசியல் கேள்விக்குறியாக இருந்தபோது, காலத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சம்பந்தனின் தலைமைத்துவ முதிர்ச்சிதான், இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டுப் பயணத்திற்கு அடித்தளமிட்டிருந்தது. அரசியல் வெறுமை சூழ்ந்த கடந்த 14 ஆண்டுகளை இராஜதந்திர ரீதியாக சரிவரக் கையாண்ட அரசியற் தலைவராகவும், அவரைப் பின்பற்றும் எங்களின் அரசியற் பயணத்திற்கான வழிவரைபடத்தை உருவாக்கித் தந்த ஒருவராகவும், சம்பந்தன் சாணக்கியம் மிக்க அரசியற் தலைவராக தனது பயணத்தில் வெற்றிகண்டிருந்தார் என்பதே உண்மை.
சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளால் மதிக்கப்பட்ட, ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு குறித்தும் தமிழினப் படுகொலைக்கான நீதி விசாரணை குறித்தும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதியாக அணுகத்தக்க அரசியற் தலைவராகவும் சம்பந்தன் ஐயா, அடையாளம் பெற்றிருந்தார். அது அவரது அரசியல் அனுபவத்திற்கும், தலைமைத்துவ ஆளுமைக்கும், இனம்சார் அரசியலில் அவர் ஆற்றிய வகிபங்குக்கும் கிடைத்த அடையாளமாகும்.
சம்பந்தன் ஐயாவின் மறைவென்பது, ஈழத்தமிழினத்தின் இரு தலைமுறை அரசியல் வரலாற்றில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகவும், அவரது அரசியல் தலைமையை ஏற்றிருந்த எங்களுக்கு இனியொருபோதும் நிரப்பவே முடியாத அரசியல் வழிகாட்டியின் இழப்பாகவுமே நிகழ்ந்திருக்கிறது.
இருந்தபோதும் அவரது தடங்களைப் பின்பற்றும் ஒருவனாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இருப்பை உறுதிசெய்யவும், ஈழத்தமிழர்களது அரசியல் உரித்துக்கான தமிழ்த் தேசியப் பயணத்தில் எனக்கிருக்கும் தார்மீகப் பங்கை உறுதிசெய்யவும், இதயசுத்தியோடு பணியாற்றுவேன் என்ற உறுதியோடு ஐயாவின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தித்து, அவரது குடும்பத்தினருக்கான அனுதாபங்களையும் பகிர்ந்துகொள்கின்றேன் என்றார்.