உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து மறைப்பதற்கு எதுவுமில்லை; பிரதமர் ஹரிணி
குற்றப்புலனாய்வு பிரிவிலும் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார்.இவர்களுக்கு பல வருடங்களாக செய்ய முடியாமல் போன இந்த வேலையை, தற்போது நாங்கள் மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம்.அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரேமாதிரி யாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 25-07-2025 அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு மேலதிக கேள்வியாக முஜிபுர் ரஹ்மான் கேட்ட வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்,
முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா உயிரிழந்ததாக இறுதியாக தெரிவிக்கப்பட்ட டீ.என்.ஏ. அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயார்.
ஆனால் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர, அன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்தபோது, அந்த இடத்துக்கு ஆரம்பமாக வந்தது இராணுவத்தினராகும். அப்படியானால் சாராவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது தொடர்பான தகவல் இராணுவத்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அநுர ஜயசிங்கவுக்கு தெரியாமல் இராணுவத்தினர் அங்குவர முடியாது.அவரும் அந்த சந்தர்ப்பதில் தெரிந்திருக்காவிட்டாலும் பின்னராவது இதனை தெரிந்திருப்பார்.
அன்றைய அரசாங்கத்துக்கு இந்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அப்படியானால் அன்றைய அரசாங்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த அநுர ஜயசிங்க, தற்போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, அந்தி விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை என தெரிவிக்க முடியும்? என்றார்.
அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
அநுர ஜயசிங்க 2024லேயே பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019லே இடம்பெற்றது. இந்த தாக்குதல் தொடர்பில் 2019இல் இருந்து விசாரணை இடம்பெற்று வருகிறது. அப்போது விசாரணைகளை சுயாதீனமாக நடத்த இடமிருந்தது. ஆனால் செய்யவில்லை. இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. அதுதான் பிரச்சினை.
ஆனால் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம். யாரும் குழப்பமடைய தேவையில்லை. எமது பிரதி அமைச்சர் இததொடர்பில் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருக்கிறார். குற்றப்புலனாய்வு பிரிவிலும் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார்.இவர்களுக்கு பல வருடங்களாக செய்ய முடியாமல் போன இந்த வேலையை, தற்போது நாங்கள் மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை.
எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம்.அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.
அதேநேரம் சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பாக அமைவதால் அந்த விபரங்களை தற்போது வெளியிட முடியாது. என்றாலும் அறிக்கையை ஆராய்ந்து பார்க்க யாருக்குவேண்டுமானாலும் முடியும்.
அத்துடன் விசாரணைகளின் முடிவில் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்துக்கு கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்க எமது அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. அதேநேரம் இதற்கு பொறுப்புக்கூக்கூடிய அதிகாரிகள் தற்போது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரே மாதிரி செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார்.