மாகாண சபைகளை பலவீனப்படுத்தவில்லை: அமைச்சர் பிமல்
வீதிகளை அபிவிருத்தி செய்ய நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் எந்த நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபடவில்லையென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 25-07-2025 அன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றிய இராசமாணிக்கம் சாணக்கியன் எம்.பி, சகல அமைச்சுகளும் மாகாண சபைகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்தமை தொடர்பில் பதிலளித்து கூறுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கூறுகையில்,
இம்முறை மாகாண சபைகளுக்கு செலவுக்காக கடந்த வருடங்களை விடவும் மூன்று மடங்கு ஒதுக்கியுள்ளோம். எங்களுக்கு வங்குராேத்து அடைந்த நாடே கிடைத்திருந்தது. வீதிகளை அபிவிருத்தி செய்ய நிதி அமைச்சு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளது. இதனால் மாகாண சபை முறைகளை பலவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
எந்த வீதியாக இருந்தாலும் அந்தந்த வீதிகள் அந்தந்த நிறுவனங்களுக்கு சொந்தமானவையே. நாங்கள் எந்தளவுக்கு நியாயமாக செயற்படுகின்றோம் என்பதனை வடக்கில் உள்ள சில எம்.பிக்கள் அறிந்துகொள்வார். நாங்கள் மூன்று மடங்கு நிதியை மாகாண சபைகளுக்கு ஒதுக்கியுள்ளோம். ஆனால் நீங்கள் இனவாத அரசியலை செய்ய வேண்டாம். அந்த கீழ்த்தரமான நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்றார்.