சம்பந்தன் சிறந்த ஆளுமை: அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உரை
இரா. சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் காணுகின்ற மிக அபூர்வமான ஆளுமையாகும்.

பாராளுமன்றத்தில் காணக்கிடைத்த மிகச் சிறந்த ஆளுமையாகவும் அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் திகழ்ந்தார் என்று அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் 25-07-2025 அன்று இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய,டபிள்யூ, ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில்,
இரா. சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் காணுகின்ற மிக அபூர்வமான ஆளுமையாகும். சம்பந்தனின் அரசியல் என்பது வெவ்வேறு யுகங்களாக ஆராயப்பட வேண்டியது. சரிதம் எழுதப்படும் போது ஒவ்வொரு யுகங்களில் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படி செயல்பட்டது என்பது பற்றி நிறைய பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வகிபாகத்தை அவர் வகித்தார். அதற்கு இந்த சபையில் பலரும் சான்று பகிர்வார்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்கின்றேன் என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரிஷாத் பதியூதின் உரையாற்றுகையில், இரா.சம்பந்தன் இந்த நாட்டில் எல்லோருக்கும் முன்னுதாரமாக திகழ்ந்தவர். நல்ல பண்பான அரசியல் தலைவர். திருகோணமலை மாவட்ட மக்களால் நன்கு நேசிக்கப்பட்டவர். அவர் சகல பிரச்சினைகளின் போதும் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பங்கு வகித்தார். நடுநிலையான போக்கையும், சிறந்த அரசியல் அறிவையும் கொண்ட சம்பந்தன் ஐயாவை இழந்துள்ளோம். இவரை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்ந்த அந்தஸ்துள்ளவராக இருந்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும். இருந்தார். இவர் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராவார் என்றார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரையாற்றுகையில்,
தேசிய அரசியலில் சிறந்தவொரு நபராக சம்பந்தன் இருந்தார். எப்போதும் அரசியல் தீர்வுக்காக முன்னின்றார். பலரும் பயங்கரவாத தீர்வை தேடிப் போன போது, அந்த விடயத்தில் அரசியல் தீர்வு காண செயற்பட்டார். அவர் ஜனநாயக முறைமையில் பாராளுமன்றத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தார். அவரின் குடும்பத்தினருக்கும் அவரின் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார்.
இலங்கை தொழிலாலளர் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் உரையாற்றுகையில், சம்பந்தன் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அவரின் அனுபவங்கள் அவரின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். என்னால் கூறக் கூடிய முன்னுதாரணத்திற்கு அவரையே குறிப்பிடுவேன். மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவருக்கு எமது மறியாதை எப்போதும் இருக்கும் அவரின் மறைவு தொடர்பில் அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.