பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தோல்வி: புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் உறுப்புநாடுகளுக்கு கடிதம்
சர்வதேச தடயவியல் விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என அக்கடிதத்தில் மேற்படி புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அடைந்திருக்கும் தோல்வி, அக்கட்டமைப்பின்மீது தமிழ்ச்சமூகம் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருப்பதாகச் பேரவையின் உறுப்புநாடுகளிடம் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள சகல மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளன.
இலங்கை விவகாரத்தில் செயற்படவேண்டிய விதம் மற்றும் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகளை உள்ளடக்கி அமெரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களான உலகளாவிய தமிழ் அமைப்புக்களின் பேரவை, வட ,அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை, இலங்கை தமிழ்ச்சங்கம், ஒன்றிணைந்த தமிழ் அமெரிக்கர் அரசியல் நடவடிக்கைக்குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு என்பன இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதிகள், உறுப்புநாடுகள் மற்றும் அவதானிப்பு நாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை இலங்கை அரசு தொடர்ச்சியாக நிராகரித்துவருவது குறித்து அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவ்வமைப்புக்கள், முள்ளிவாய்க்கால் இனவழிப்பு இடம்பெற்று 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில் ஆக்கபூர்வமானதொரு பொறுப்புக்கூறல் செயன்முறையை உறுதிப்படுத்துவதில் பேரவை தோல்வியடைந்திருப்பது பற்றிக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
அத்தோடு இவ்விடயத்தில் பேரவையின் தோல்வியானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ்ச்சமூகம் நம்பிக்கை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகவும் அவ்வமைப்புக்கள் விசனம் வெளியிட்டுள்ளன.
அண்மையில் யாழ். செம்மணி சித்துபாத்தியில் அடையாளங்காணப்பட்ட மனிதப்புதைகுழியில் 140 க்கும் மேற்பட்ட மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சர்வதேச தடயவியல் விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என அக்கடிதத்தில் மேற்படி புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
தமிழ்மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினையான சுயநிர்ணய உரிமை விவகாரம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருப்பதாகவும், நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட பூரணத்துவமடையாத காலனித்துவ நீக்க செயன்முறை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைசார் கோட்பாட்டை உறுதிப்படுத்துவதற்குத் தவறிவிட்டதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள சகல மனிதப்புதைகுழிகள் தொடர்பாகவும் சர்வதேச தடயவியல் விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஆதரவளித்தல், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் ஊடாக இலங்கை தொடர்பில் விசேட தீர்ப்பாயம் ஒன்றை ஸ்தாபிப்பதற்குப் பரிந்துரைத்தல், தமிழர் தாயக விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் 4 ஆவது குழுவிடம் பாரப்படுத்துவதற்குப் பரிந்துரைத்தல், தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதுடன் ஐ.நாவின் மேற்பார்வையுடன்கூடிய சுயாதீன பொதுசன வாக்கெடுப்புக்கு வசதியேற்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை உறுப்புநாடுகள் முன்னெடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.