பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்குவது ஆபத்து: கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன
காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின்போது பதிவான சில நடவடிக்கைகளை சிலர் பயங்கரவாத செயற்பாடு எனக் கூறலாம்.

பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்படுவதானது நாட்டு மக்களும், செயற்பாட்டாளர்களும் அரசினால் மீறல்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கு இடமளிப்பதுடன் விமர்சனங்கள் ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.
அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தின் ஊடாக நீண்டகாலமாக கடும் விமர்சனங்களுக்கும், எதிர்ப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையிலேயே அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஜயம்பதி விக்ரமரத்ன மேற்கண்டவாறு எச்சரித்துள்ளார்.
'குறித்தவொரு செயற்பாடு பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்தினுள் உள்ளடக்கப்படவேண்டுமாயின், அது மிகப்பயங்கரமானதொரு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகவோ அல்லது மிதமிஞ்சிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாகவோ அல்லது தமது இலக்குகளை அடைந்துகொள்வதற்காக மேற்குறிப்பிட்ட இரண்டு கூறுகளையும் உபயோகிக்கக்கூடிய தனிநபரினதோ, அமைப்பினதோ நோக்கத்தை அடைவதை முன்னிறுத்தி அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாகவோ இருக்கவேண்டும்' என அவர் விளக்கமளித்துள்ளார்.
அதேபோன்று 'பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சில செயற்பாடுகள் வன்முறையற்றதாக அமையக்கூடும். தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அவ்வமைப்பின் இலக்கை அடைந்துகொள்ளும் நோக்கில் இலத்திரனியல் உபகரணங்கள், கணினி கட்டமைப்புக்கள் போன்றவற்றை யாரும் அறியாதவண்ணம் மறைத்து வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். இருப்பினும் சிலரது செயற்பாடுகளில் வன்முறையின் கூறுகள் தென்படினும், அவற்றைப் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களின் ஊடாகக் கையாளக்கூடாது.
அதுமாத்திரமன்றி, 'காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின்போது பதிவான சில நடவடிக்கைகளை சிலர் பயங்கரவாத செயற்பாடு எனக் கூறலாம். ஆனால் அங்கு பதிவான சில நடவடிக்கைகள் முற்றுமுழுதாக அமைதியான முறையில் இடம்பெற்றவை அல்ல எனினும், அவற்றைப் பயங்கரவாத செயற்பாடாக வகைப்படுத்தமுடியாது.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை அடுத்து தீவிரமடைந்த வன்முறைகள், அவற்றின் விளைவாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டமை மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை என்பன பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழன்றி, பொதுச்சட்டத்தின் கீழேயே கையாளப்படவேண்டும்' என்றும் ஜயம்பதி விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.