பயங்கரவாத தடைச் சட்டம்; தடுத்து நிறுத்துவது அவசியம்
43 வருடங்களுக்கு முன்னர் தமிழர்களை கொன்றொழிப்பதற்காக அன்றைய இனவாத சிங்கள அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டிருந்த பயங்கரவாத தடை சட்டம்,பல தசாப்த காலமாக தமிழர்களை நசுக்குவதில் மிகப்பெரும் ஆயுதமாக சிங்கள அரசுகளால் பாவிக்கப்பட்டு வந்தது.அந்த சட்டத்தினால் தமிழர்கள் பட்ட துன்பங்கள் சொல்லிலடங்காதவை.எத்தனை ஆயிரம் இளைஞர்கள் இந்த சட்டத்தால் காணாமலாக்கப்பட்டார்கள் ,கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு ஈழத்தில் வாழும் தமிழர்கள் ஒவ்வொருவருமே சாட்சியம்.இதுவரை தமிழர்களுக்கு எதிராக மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்த அந்த சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டு அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்ட மூலமொன்றினை நிறைவேற்றிக் கொள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இறங்கியுள்ளது.இதற்கு தென்னிலங்கையிலிருந்தும் சர்வதேச அளவிலும் கடும் எதிர்ப்புகள் உருவாக ஆரம்பித்திருக்கின்றன.முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத சட்டமூலத்தின் மூலம் ஜனாதிபதி பெற்றுக் கொள்ளும் அதிகாரங்களின் விரிவாக்கம் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகளின் செயற்பாட்டை தானாகவே முடிவுக்கு கொண்டுவரும்.அத்துடன்,‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பல விடயங்களை ஜனாதிபதியே கையாள்வார். தேர்தலை நடத்துவது அல்லது நடத்தாமல் இருப்பது அமைதியான போராட்டங்களை நடத்துவதற்கான உரிமை,அமைதியாக ஒன்றுகூடும் உரிமை, பத்திரிகை சுதந்திரம், சட்டவிரோத கைது, சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைப்பது போன்ற விடயங்களில் இச்சட்ட மூலம் அமுலுக்கு வந்தால் தனி நபர் சுதந்திரம் இழக்கப்படும்.இவ்விடயங்கள் தொடர்பான பாராளுமன்றத்தின் அனைத்து மேற்பார்வை செயற்பாடுகளும் ஜனாதிபதியால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும்.
43 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடை சட்டம் தமிழ் மக்களை சிதைத்து சின்னாபின்னமாக்கியது தமிழரின் இருண்ட யுகமாகும்.இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு யுத்த காலத்தில் பால்,வயது என எந்த வேறுபாடுகளுமின்றி பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்.பலர் காணாமலாக்கப்பட்டனர்.பலர் சிறைகளுக்குள்ளேயே பலியாக்கப்பட்டார்கள்-பலருக்கு என்ன நடந்தது என்று கூட தெரியாத மர்மம் இன்று நீடித்துக்கொண்டிருக்கிறது.இவ்வாறு தமிழர்களுக்கென்றே கொண்டுவரப்பட்டிருந்த பயங்கரவாத தடை சட்டம் தொடர்பில் சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் என்றுமே அலட்டிக்கொண்டதில்லை.காரணம் அந்த சட்டம் தமிழர்களுக்கானது என்ற காரணத்தினால்.ஆனால் இன்று ரணில் அரசு கொண்டுவரவிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் இனம்,மதம், மொழிகளை கடந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்ற எவர் மீதும் நடவடிக்கையினை எடுக்க முன்மொழிவதுடன்,ஏற்கனவே தமிழர் தேசத்தில் தன்னிச்சையாக செயற்படும் இராணுவம், பொலிஸார்,கடற்படையினருக்கு இந்த புதிய சட்டம் மேலும் மேலும் அதிகாரங்களை வழங்குவதாகவே அமைந்திருக்கிறது.
புதிய சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில்,தமிழர் தேசத்தில் சமகாலத்தில் அரங்கேறும் நில அபகரிப்புகள்,கலாசார,பண்பாட்டு படுகொலைகளுக்கு புதிய சட்டம் மென்மேலும் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு உதவியாக இருக்கும்.அத்துடன் சிங்கள தேசம் தமிழர் தேசத்தில் அரங்கேற்றும் நில அபகரிப்பு,பண்பாட்டு படுகொலைகளை எதிர்த்து எவரும் ஒரு போராட்டத்தை கூட நடத்தமுடியாமல் போகும் சூழலும் இருக்கிறது.அவ்வாறு ஒரு போராட்டம் நடைபெறுமாகவிருந்தாலோ அல்லது இவற்றுக்கு எதிராக எவராவது குரல் கொடுப்பாயாக இருந்தால் அவர்களுக்கு எதிராக புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் பாய்வதற்கும் தாராளமாக இடமிருக்கிறது.
முன்னைய சட்டத்தை விட கொடிய சட்டமாக காணப்படும் புதிய சட்டமூலத்தை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தும் வரையில், ஐக்கிய நாடுகள் சபை , ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.அத்துடன் புலம்பெயர் தேசத்தவர்களும் இதற்கான அழுத்தத்தை சர்வதேச அரங்குகளினூடாக வழங்குவதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும்.குறித்த சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.எனவே இதனை தடுத்து நிறுத்தும் பொறுப்பு தமிழ் மக்களுக்கும் இருக்கிறது.தமிழர் சார்ந்த புலம்பெயர் அமைப்புகளுக்கும் இருக்கிறது.