நடுக்கடலில் ஆபத்தில் சிக்கிய வணிகக் கப்பல் பணியாளர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை
இந்திய, துருக்கிய மற்றும் அஜர்பைஜான் நாட்டினரைக் கொண்ட பாதிக்கப்பட்ட கப்பலின் 14 பணியாளர்கள், சமுதுர கப்பலால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
 
        
தெற்கு கடலில் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து, ஆபத்தில் சிக்கிய எம்.வி. இன்டர்கிரிடி ஸ்டார் என்ற வணிகக் கப்பலின் பணியாளர்களை இலங்கை கடற்படை வெற்றிகரமாக மீட்டுள்ளது.
இலங்கைக்கு தெற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் அதன் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்ததால், பேரிடரிலும் உயிருக்கு ஆபத்திலும் இருந்த குறித்த வணிகக் கப்பலின் பணியாளர்கள், கடற்படையினரால் மீட்கப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
குறித்த கப்பலின் முக்கிய இயந்திரங்கள் செயலிழந்து, ஆபத்தில் இருப்பதாக கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு கிடைத்த அறிவிப்பிற்கமைய, கடற்படையினர், பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய அந்தக் கடல் பகுதியில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படைக் கப்பலான ஐ.என்.எஸ். சமுதுரவை அனுப்பியது.
இந்திய, துருக்கிய மற்றும் அஜர்பைஜான் நாட்டினரைக் கொண்ட பாதிக்கப்பட்ட கப்பலின் 14 பணியாளர்கள், சமுதுர கப்பலால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதன் பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
மேலும், கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ், பாதிக்கப்பட்ட வணிகக் கப்பலுக்கு உதவுவதற்காக எம்.வி. மோர்னிங் க்ளோரி என்ற வணிகக் கப்பல் கடல் பகுதியில் தயார் நிலையில் இருந்ததுடன், இதன் மூலம் கடல்சார் ஆபத்து ஏற்பட்டால் உதவி வழங்குவதற்கான உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





 
  
