அநுர பொதுமன்னிப்பளித்தவருக்கு 7வருட கடூழிய சிறை
மேலதிகமாக பாதிக்கப்பட்ட தரப்புக்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தர விட்ட நீதிபதி குறித்த நட்ட ஈட்டை செலுத்த தவறினால் அபராத தொகையாக அறவிடவும் அதனை மையப்படுத்தி 10 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2025 வெசாக் பூரணை தினத்தன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக்கூறப்படும் டபிள்யூ.எச் அத்துல திலக்கரத்ன எனும் குற்றவாளிக்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் 7 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதற்கு மேலதிகமாக பாதிக்கப்பட்ட தரப்புக்கு 40 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தர விட்ட நீதிபதி குறித்த நட்ட ஈட்டை செலுத்த தவறினால் அபராத தொகையாக அறவிடவும் அதனை மையப்படுத்தி 10 மாத கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
டபிள்யூ.எச். அத்துல திலகரத்ன எனும் குறித்த நபர் 40 இலட்சம் ரூபா மோசடி செய்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் மேல் நீதிமன்றினால் அண்மையில் குற்றவாளியாக உறுதிப்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டவராவார்.
நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளையின் முன்னாள் முகாமையாளராக பணியாற்றிய குறித்த நபரிடம் 2014 பெப்ரவரி 17 – ஜூன் 09 காலப்பகுதியில் பங்குச் சந்தையில் இலாபம் பெற்றுத் தருமாறு நபர் ஒருவரால் வழங்கப்பட்ட 40 இலட்சம் ரூபா பணத்தை ஏமாற்றிய சம்பவம் தொடர்பிலேயே சந்தேகநபர் குற்றவாளியாக நிரூபணமாகியுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த மே 02 ஆம் திகதி அநுராதபுரம் மேல் நீதிமன்றினால் வழங்கப்பட்டது.
இதன்போது வடமத்திய மாகாணத்திற்கான மேல் நீதிமன்ற நீதவான் லக்மாலி ஹேவாவசம் குற்றவாளிக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு (5 வருடங்களுக்கு இவ்வாறான குற்றங்களை புரிந்தால் 2 வருட கடூழிய சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும் 20 இலட்சம் ரூபா நட்ட ஈட்டை உரிய தரப்பிற்கு செலுத்துமாறு தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த நட்ட ஈட்டை செலுத்த தவறினால் அதனை அபராத தொகையாக அறவிடவும் அதனை மையப்படுத்தி 6 மாத கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனைவிட 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்ப்ட்டிருந்த்தது.
இந்நிலையில் குறித்த அபராத தொகையை செலுத்துவது தொடர்பான வழக்கு ஜூன் 04ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கமைய குறித்த வழக்கு கடந்த 04 ஆம் திகதி அநுராதபுரம் மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த குற்றவாளி மே 12ஆம் திகதி ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாக அநுராதபுரம் சிறை அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி பொது மன்னிப்பின் நிபந்த்தனைகளின் பிரகாரம் குறித்த குற்றவாளியின் அபராத தொகை ரத்து செய்யப்ப்ட்டுள்ளதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் மன்றுக்கு அறிவித்திருந்த்தனர்.இதனைத் தொடர்ந்து குற்றவாளிக்கு எதிரான குறித்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் ஜனாதிபதி பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தி கடந்த வெசக் காலத்தில் குறித்த குற்றவாளி ஜனாதிபதி பொதுமன்னிப்பை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டுள்ளமை விசாரைணைகளில் தெரியவந்தது.
இந்த பின்னணியில் குறித்த நபர் தொடர்பிலான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு அநுரதாபுரம் வடமத்திய மாகாணத்திற்கான மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம் தீர்ப்பை அளித்தார்.
குற்றவாளிக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டில் அநுரதாபுரம் மேல் நீதிமன்றத்தில் 6 வழக்குகளும் அநுராதபுரம் பிரதான நீதிவான் நீதிமன்றில் 22 வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.அத்துடன் அநுராதபுரம் பிரதான நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்கு அமைய குறித்த நபர் 50 கோடி ரூபாவுக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளதாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.
பிரபல வர்த்தகர்கள் வைத்தியர்கள் சட்ட வைத்திய அதிகாரிகள் விசேட வைத்திய நிபுணர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக சேவையின் உறுப்பினர்கள் என பலர் இந்த மோசடியில் சிக்கியுள்ளதாக விசாரணைகளில் வெளிக்கொணரப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்..