அரசாங்கத்துக்குள் ஊழல், மோசடிகள் இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை: அமைச்சர் சமந்த வித்தியாரத்ன
போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்படவில்லை. தற்போது ஆரம்ப அடியை எடுத்து வைத்திருக்கின்றோம். இதில் இறுதி வரை பயணிக்க முடியும்.
அரசாங்கத்துக்குள் ஊழல், மோசடிகள் இடம்பெற்றாலும் அவற்றுக் கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கப் போவதில்லை. கொள்கலன் விடுவிப்பு குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் யார் தவறிழைத்திருந்தாலும் அவர்கள் அரசாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் 14-09-2025 அன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்படவில்லை. தற்போது ஆரம்ப அடியை எடுத்து வைத்திருக்கின்றோம். இதில் இறுதி வரை பயணிக்க முடியும். நீதிக்கான உண்மையான சுற்றி வளைப்புக்கள் இப்போது தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இதற்காக நடவடிக்கைகள் குறிப்பிட்டவொரு சமூகத்துக்காக மாத்திரமே முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போது சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
போதைப்பொருள் அற்ற தூய்மையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுப்போம். குறுகிய காலத்துக்குள் போதைப்பொருள் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை விடுவிப்போம். தற்போது அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எதிர்க்கட்சிகளிடம் எந்த விடயமும் இல்லாததால் கொள்கலன் விடுவிப்பினை பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் யார் தவறிழைத்திருந்தாலும் அவர்கள் அரசாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும்.
அரசாங்கத்துக்குள் ஊழல், மோசடிகள் இடம்பெற்றாலும் அவற்றுக் கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதில் பின்வாங்கப் போவதில்லை. மக்கள் வழங்கிய ஆணைக்கமையவே ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளன. நாட்டிலுள்ள சகல முன்னாள் ஜனாதிபதிகளும் இதுவரைக் காலமும் இந்த சலுகைகளை அதியுட்சமாக அனுபவித்திருக்கின்றனர். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவை தொடர்பில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
சட்டமா அதிபர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் சபையின் ஆலோசனைகளுக்கமையவே பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகர் நிராகரித்தார். சபாநாயகர் தனித்து இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. நியாயமான முடிவையே அவர் எடுத்துள்ளார். அதனை எதிர்க்கட்சிகளால் சகித்துக் கொள்ள முடியாவிட்டால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தாலும் அதனை எம்மால் இலகுவாக தோற்கடித்திருக்க முடியும் என்றார்.





