ஐ.நா.உயர்ஸ்தானிகருடன் அமைச்சர் விஜித்த சந்திப்பு
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், 10-09-2025 அன்று உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரத்தை உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் கலந்துகொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், 10-09-2025 அன்று உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, உயர்ஸ்தானிகர் வோல்கர் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் ஹேரத் விரிவாக விளக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கம் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு திருப்புமுனையாக அமையும் என தான் நம்புவதாகவும், கடந்தகால மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்காக முறையான, சுயாதீனமான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவுவதற்கான வாய்ப்பை இலங்கை இழக்காது எனவும் உயர்ஸ்தானிகர் நம்பிக்கை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.





