கட்டார் வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகார பிரதி அமைச்சர் பேச்சு
கட்டார் தலைநகர் டோஹாவில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.
வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, கட்டாரின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் சுல்தான் பின் சாத் பின் சுல்தான் அல் முரைக்கியுடன் 13-09-2025 அன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இதன் போது வெளிவிவகாரப் பிரதி அமைச்சர், இந்தத் தாக்குதல்கள் குறித்து இலங்கையின் கவலைகளைத் தெரிவித்ததுடன், கட்டார் அரசுக்கும் மக்களுக்கும் ஆதரவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டார் தலைநகர் டோஹாவில், ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதலில் ஹமாஸின் தோஹா அலுவலகத் தலைவர் கலீல் அல்ஹையா உட்பட பல தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதல் காசாவில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்து வந்த கட்டாரின் பங்களிப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்நிலையிலேயே இலங்கை தனது கரிசணையை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
குறித்த அறிக்கையில் உலகளாவிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டங்களை நிலைநிறுத்தி, பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நோக்கி இராஜதந்திர உரையாடலில் ஈடுபடுவதிலும், நிதானத்தைக் கடைப்பிடிப்பதிலும், அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





