சித்ரசிறி அறிக்கையை வெளிப்படுத்துங்கள்: தயாசிறி எம்.பி. கோரிக்கை
அரச வாகனத்தை பயன்படுத்த போவதில்லை என்று குறிப்பிட்டீர்கள்.ஆனால் அன்று அரச வாகனங்களை அனைவரும் பயன்படுத்துகின்றீர்கள்.
சித்ரசிறி அறிக்கையின் பிரகாரமே ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. சித்ரசிறி அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள்.மக்களின் வரிப்பணத்தில் தான் இந்த குழு செயற்பட்டது.ஆகவே அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 10-09-2025 அன்று நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளது. மக்களும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.ஆகவே இந்த சட்டமூலத்துக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கபோவதில்லை..மக்களுக்கு இல்லாத ஏதும் ஆட்சியாளர்களுக்கு இருக்க கூடாது என்று தேசிய மக்கள் சக்தி ஆரம்பத்தில் குறிப்பிட்டது.ஆனால் இன்று அந்த கொள்கை மீறப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை பிறகு குறிப்பிடுகிறேன்.
அரச வாகனத்தை பயன்படுத்த போவதில்லை என்று குறிப்பிட்டீர்கள்.ஆனால் அன்று அரச வாகனங்களை அனைவரும் பயன்படுத்துகின்றீர்கள். வீடுகளை பெற மாட்டோம் என்றீர்கள்.ஆனால் இன்று அனைவரும் வீடுகளை பெற்றுக்கொண்டுள்ளீர்கள்.ஒருசிலர் அமைச்சருக்கான சம்பளத்தையும்,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தையும் பெறுகிறார்கள்.பதவிகளுக்கும்,நபர்களுக்கும் இடையில் வேறுபாடு மற்றும் பிரத்தியேக மரியாதைகள் உண்டு .இதனை அரசாங்கம் தற்போது விளங்கிக் கொண்டுள்ளது.
சித்ரசிறி அறிக்கையின் பிரகாரமே இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆகவே சித்ரசிறி அறிக்கையில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும்.அறிக்கையை சபைக்கு சமர்ப்பியுங்கள்.மக்களின் வரிப்பணத்தில் தான் இந்த குழு செயற்பட்டது.ஆகவே அறிக்கையை பகிரங்கப்படுத்துங்கள்.
முன்னாள் ஜனாதிபதிகள் நாட்டுக்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்கள். அவர்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. வெறுப்பினை கொண்டு செயற்படாதீர்கள் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.





