நம்பிக்கையில்லா பிரேரணை நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
சபாநாயகர் பதிலளிக்கையில், சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை பரிசீலனை செய்துவிட்டே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எனது நிலைப்பாட்டை அறிவித்தேன் என்றார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகப்பதற்கு காரணமாக சபாநாயகர் எடுத்துக்கொண்ட சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்து எதிர்க்கட்சினர் மேற்கொண்ட கடும் எதிர்ப்பு காரணமாக சபையை கட்டுப்படுத்த முடியாமல் சபாநாயகருக்கு சபை நடவடிக்கையை 10 நிமிடங்குளுக்கு ஒத்திவைக்க வேண்டி ஏற்பட்டது.
பாராளுமன்றம் 11-09-2025 அன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து, விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சி பிரதமகொரடா கயந்த கருணாத்திலக்க குறிப்பிடுகையில், எங்களால் முன்வைக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நீங்கள் நேற்று (நேற்று முன்தினம்) அறிவிப்பொன்றை செய்திருந்தீர்கள். இதன்போது, சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையையும் நாங்கள் தெரிந்துகொள்வதற்காக சபைக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தோம்.
நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரிப்பதற்காக தெரிவித்த விடயங்கள் தெளிவற்றதாகும் .இந்த சபையில் சபாநாயகர்கள் சபையில் நபிக்கையில்லா பிரேரணைகளை அனுமதித்த முறைகள் தொடர்பில் பல முன்மாதிரிகள் இருக்கின்றன. ஆனால் முதல் தடவையாகவே தற்போதைய சபாநாயகரே நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிராகரித்தார்.
159 உறுப்பினர்களை வைத்துக்கொண்டுள்ள அரசாங்கத்துக்கு ஏன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம்கொடுக்க முடியாதென கேட்கிறோம். அதனால் சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பிக்குமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் என்றார். அதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், சட்டமா அதிபரின் அறிக்கை மற்றும் பாராளுமன்ற செயலாளரின் பணியாற்தொகுதியின் அறிக்கையை பரிசீலனை செய்துவிட்டே, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எனது நிலைப்பாட்டை அறிவித்தேன் என்றார்.
அதனைத் தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 46 (1) உறுப்புரைக்கமைய பிரதி அமைச்சர் நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதியாகும். அதனாலே சில சந்தர்ப்பங்களில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபையில் இருக்கும்போதே பிரதி அமைச்சர் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான விவாத்துக்கான நம்பிக்கையில்லா பிரேரணையாகும். அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவாவது இந்த விவாதத்தை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.





