புதிய பிரேரணை குறித்த திருத்தங்களை சமர்பிக்க ஒக்டோபர் முதலாம் திகதி வரையில் அவகாசம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (8) ஜெனிவாவில் ஆரம்பமானது.
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான தலைமையிலான இணையனுரசணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணையில் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்களை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்பதாக செயலகத்திடம் எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (8) ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை தொடர்பில் பேரவையில் ஏற்கனவே காலநீடிப்பு செய்யப்பட்டு நடைமுறையில் இருந்த 57/1 தீர்மானம் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், இம்முறை கூட்டத்தொடரில் இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்" எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் திருத்தங்கள் உள்வாங்கப்படாத 60/L.1 எனும் முதலாவது வரைவு வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஊடாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட ஆணை மற்றும் அத்தீர்மானத்தின் ஊடாக வலியுறுத்தப்பட்ட சகல விடயங்களும் காலநீடிப்பு செய்யப்படவேண்டும் எனவும், கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்டத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான சுயாதீன சிறப்பு சட்டவாதியின் பங்கேற்புடனான பிரத்தியேக நீதித்துறை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்து இலங்கை அரசாங்கம் அவதானம் செலுத்தவேண்டும் எனவும் அப்பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்பிரேரணையில் மேற்கொள்ளவேண்டும்ம் என எதிர்பார்க்கப்படும் திருத்தங்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதிக்கு முன்பதாக செயலகத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.





