புலம்பெயர்ந்தோரின் நோக்கத்தை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது: டி.வி.சானக எம்.பி.
பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ உரிய சட்ட நடவடிக்கை எடுத்து விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள். புலம்பெயர்ந்தோரின் நோக்கத்தை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 10-09-2025அன்று நடைபெற்ற ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஆளும் தரப்பினர் பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எமது குழுத் தலைவர் நாமல் ராஜபக்ஷ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கடந்த வாரம் கூட சந்திப்பை நடத்தி நாமல் ராஜபக்ஷவுக்கும் போதைப்பொருள் வியாபாரத்துக்கும் இடையில் தொடர்பிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவின் கருத்துக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ உரிய சட்ட நடவடிக்கை எடுத்து விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளார். போலியான குற்றச்சாட்டுக்களை பாராளுமன்றத்துக்குள் முன்வைப்பவர்கள் வெளியில் சென்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சியிலேயே பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கொள்கை அடிப்படையில் நீக்கப்பட்டன.
நாட்டு மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் மறந்து விட்டது. ஆனால், விடுதலை புலிகள் அமைப்பின் புலம்பெயர் அமைப்புக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உறுதியாக நிறைவேற்றுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டை விட்டு வெளியேற்றுவதையும், அவருக்கான பாதுகாப்பை நீக்குவதையும் விடுதலை புலிகளின் புலம்பெயர் அமைப்பாளர்கள் விரும்புவார்கள். புலம்பெயர்ந்தோரின் நோக்கத்தை செயற்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்றார்.





