பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாத அரசாங்கத்திடம் ஒழுக்கமுமில்லை: கபீர் ஹாசிம் எம்.பி
கொள்கலன்கள் 323 வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்தோம்.
அரசாங்கத்துக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதுடன் தற்போது ஒழுக்கமும் இல்லை என்பதை அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் மூலம் மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர். அதனால் அரசாங்கம் இரண்டிலும் தோலிவியடைந்துள்ளதென கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-11-2025 அன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான ஜனாதிபதியின் வரவு செலவு திட்ட உரை மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருப்பது, அவர்கள் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் என்ற நம்பிக்கையில் அல்ல. அதனை உங்களால் செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். அதனாலே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் பின்னால் செல்கிறீர்கள். நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்துவது நாணய நிதியத்தின் பிரதானியாகும். என்றாலும் உங்களது ஒழுக்கம், சாதாரண சமூகநீதியை ஏற்படுத்தும், சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையிலே வாக்களித்தனர்.
ஆனால் இன்று அதனையும் அரசாங்கம் இல்லாமலாக்கிக் கொண்டிருக்கிறது. கொள்கலன்கள் 323 வெளியேற்றப்பட்டமை தொடர்பில் சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானித்தோம். அதனை இதுவரை மேற்கொள்ள முடியாமல் போயிருக்கிறது. தெரிவுக்குழு அமைக்க முமுடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன?
எதனை மறைக்கப்போகிறீர்கள். அதேபோன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட கெப் வாகனம் கொண்டுவர முற்படுகிறீர்கள். உங்களது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் தேவையில்லை, பஸ்ஸில் செல்வதாக தெரிவித்தீர்கள். ஏன் இப்போது கெப் கொண்டுவரப் போகிறீர்கள்.? கெப் கொண்டுவரும் கொள்முதல் நடைமுறையை மீறி செயற்பட்டிருக்கிறது. கேள்விக்கோரல் மேற்கொள்ளப்பட்டு, 49 நாட்களுக்கு பின்னரே அதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் 12நாட்களில் கெப் வாகனம் கொண்டுவருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதில் மோசடி இடம்பெற்றிருக்காதா?
அதனால் அரசாங்கத்துக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதுடன் தற்போது உங்களுக்கு ஒழுக்கமும் இல்லை இரண்டிலுமே தோல்வியடைந்திருக்கிறீர்கள். அதேபோல் அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது மக்கள் உணவுக்காக வரிசையில் இருந்ததாகவும், காஸ் டெங்கி வெடித்ததாகவும் பாரிய பொய்யை தெரிவிக்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் வெளிநாட்டு கையிறுப்பு 6.2 பில்லியன் டொலர் இருந்தது. ரூபா பலமடைந்து, நாடு அபிவிருத்தி பாதையில் செல்ல ஆரம்பித்திருந்தது.வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை மீள திருப்பியே உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவ்வாறு இருந்த நாட்டில் கடந்த மாதம் சபாநாயகர், அமைச்சர் ஹர்ஷன நாணக்கார உள்ளிட்ட 5பேர் சிறிலன்கன் எயார்லைன் விமானத்தில் இங்கிலாந்து சென்றிருந்தனர். அவர்கள் விமான பற்றுச்சீட்டை எகனமிக் கிளாசில் இருந்து அதனை பிஸ்னஸ் கிளாசுக்கு மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.இது வெட்கப்பட வேண்டிய செயல்.பஸ்ஸில் செல்வதாக தெரிவித்தவர்களே இவ்வாறு செயற்படுகின்றார்கள்.
அத்துடன் அரசாங்கம் 2024ல் வழங்கி இருந்த நிதி இலக்கை அடைந்துகொள்ளும் திட்டத்தை அவ்வாறே பாதுகாத்துக்கொண்டுள்ளது. அதனையிட்டு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். என்றாலும் இந்த இலக்குகளை அடைவதற்கு யாரை பழியாக்கிக்கொண்டீர்கள் என கேட்கிறோம். இதன் சுமையை சமூகத்தில் யார் அதிகம் சுமக்க வேண்டி ஏற்பட்டது என அரசாங்கத்திடம் கேட்கிறோம்.
அத்துடன் அரசாங்கத்தின் கடந்த வருடம் மற்றும் அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தை பார்க்கும்போது,1971, 87,88 காலப்பகுதி ஜ,வி.பி புரட்சி பிழை என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதேபோன்று 76 வருடங்கள் நீங்கள் மேற்கொண்ட போராட்டம் தவறு என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. 60 வருடங்களுக்கு மேலாக நாங்கள் மேற்கொண்டுவந்த கொள்கையை தவறென தெரிவித்து வந்த,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தற்போது அதனை ஏற்றுக்கொண்டிருப்பதை அவரது வரவு செலவு திட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.





