மன்னாரில் புதிய காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தியது அரசாங்கம்
மன்னார் தீவில் ஆரம்பிக்கப்படவிருந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியை முன்னெடுக்கக் கூடிய வேறு பிரதேசங்களை இனங்காண வேண்டியுள்ளது.
மன்னாரில் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களுக்கு அப்பால், எந்தவொரு புதிய திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு, மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த பணிப்புரை குறித்து மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியால் திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 04-11-2025 அன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளிக்கையில்,
நாடளாவிய ரீதியில் மீள்புதிப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல்வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நடவடிக்கைகள் 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.
ஏனைய கருத்திட்டங்களான வின்ட்ஸ்கேப் மன்னார் தனியார் நிறுவனத்தின் 20 மெகாவோல்ட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் ஹேலிஸ் பென்டோஸ் நிறுவனாத்தன் 50 மெகாவோல்ட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் துறைசார் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளாக, வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டில் மொத்த மின் உற்பத்தியில் 70 சதவீதத்தை மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி ஊடாக உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே தேசிய இலக்காகும். மீள்புதுப்பிக்கத்தஎக்க வலுசக்தி எனும் போது காற்றாலை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதற்கமையவே மன்னார் மற்றும் அதனை அண்மித்த தீவுகள் காற்றாலை மின் உற்பத்திக்காக தெரிவு செய்யப்பட்டன. அதற்கமைய முன்மொழியப்பட்ட 3 வேலைத்திட்டங்களில் ஒன்று 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 100 மெகாவோல்ட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இலங்கை மின்சாரசபையால் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர மேலும் 70 மெகாவோல்ட் காற்றாலை மின்உற்பத்தி திட்டங்களை இரண்டில் ஒன்றை இவ்வாண்டு டிசம்பரிலும், மற்றைய திட்டத்தை 2026 டிசம்பரிலும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எவ்வாறிருப்பினும் அவை தொடர்பில் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. அந்த எதிர்ப்புக்களும் கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே தான் இந்த மூன்று திட்டங்களுக்கு அப்பால் புதிய திட்டமொன்றை மன்னார் தீவை அண்மித்து ஆரம்பிப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் மேற்கூறப்பட்ட மூன்று திட்டங்களுக்கு அப்பால் குறித்த பிரதேசத்தில் புதிதாக எந்தவொரு மின்உற்பத்தி திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாமலிருப்பதற்கு ஜனாதிபதியால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மன்னார் தீவில் ஆரம்பிக்கப்படவிருந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியை முன்னெடுக்கக் கூடிய வேறு பிரதேசங்களை இனங்காண வேண்டியுள்ளது.
அதற்கு குறிப்பிட்ட காலம் செல்லும். அதேவேளை 70 சதவீத மீள்புதுப்பிக்கத்த வலுசக்தி என்ற இலக்கையும் அடைய வேண்டியுள்ளது. மீள்புதுப்பிக்கத்த வலுசக்தியைப் போன்று, மக்களின் கோரிக்கைகளும் முக்கியத்துவமுடையவையாகும் என்றார்.





