இரத்த வெள்ளத்தை ஓடச் செய்ய அரசியல் சூழ்ச்சி: அமைச்சர் நளிந்த
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 18-11-2025 அன்று இடம்பெற்றது.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பின்கீழ் அநாவசிய கட்டுமானத்தை அகற்றுவது மற்றும் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்பட்டால் ஏற்படக்கூடிய இனவாதப் பிரச்சினைகளைத் தவிர்த்து, அமைதியைப் பாதுகாப்பதே எமது பிரதான நோக்கமாகும். கடந்த கால வரலாற்றைப் போன்று இனவாதத்தின் ஊடாக மீண்டும் இரத்த வெள்ளத்தை ஏற்படச் செய்வதற்கான அரசியல் சூழ்ச்சிகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் 26ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், சட்ட மற்றும் ஒழுங்குப் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க முனையும் குழுக்கள் தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 18-11-2025 அன்று இடம்பெற்றது. இதன் போது திருகோணமலை கடற்கரையில் அனுமதியின்றி பிரதிஷ;டை செய்யப்பட்ட புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
கேள்வி : திருகோணமலை கடற்கரையில் அனுமதி பெறப்படாமல் வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புத்தர் சிலையை அகற்றிய விடயத்தில் பொலிஸாரின் நடத்தை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் கூட தலையிடாத நிலையில் பொலிஸார் யாருடைய தேவைக்காக இவ்வாறு செயற்பட்டனர்?
பதில் : கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பு யாதெனில், தமது பாதுகாப்பு எல்லைக்குள் காணப்படும் அநாவசிய கட்டுமானங்களை அகற்றுவதாகும். இவ்வாறான செயற்பாடுகள் நாட்டின் பல பகுதிகளிலும் அவ்வப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சட்டம் மற்றும் அமைதியைப் பாதுகாப்பதற்காகவே பொலிஸாரும் இருக்கின்றனர். எனவே ஏதேனுமொரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டம், ஒழுங்கிற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு பொலிஸார் இடமளிக்கப் போவதில்லை.
இந்த பகுதியில் தற்காலிகமாக சிற்றுண்டிசாலையொன்றை அமைப்பதற்காக குறுகிய காலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. சில வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுடனேயே அதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனை அகற்றுவதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே புத்தர் சிலையொன்றும் அங்கு பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. புத்தர் சிலையொன்றுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தப்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய இனவாத பிரச்சினைகள் எந்தளவுக்கு செல்லும் என்ற வரலாறு எமது நாட்டில் காணப்படுகிறது.
எனவே தான் அந்த பிரதேசத்தில் அமைதியைப் பாதுகாப்பதற்கும், புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர். திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் 26ஆம் திகதி இது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதன் போது பொலிஸாரால் அறிவிக்கப்படும் காரணிக்கமைய, நீதவான் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகளை சேகரிப்பதற்கும், தற்போது எந்தவொரு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் தனித்துவத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், 2025.11.26ஆம் திகதி வரை எந்த வகையிலும் புதிய நிர்மானப்பணிகள் எவையும் முன்னெடுக்கப்படக் கூடாது என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே அப்பிரதேசத்தில் அமைதியைப் பாதுகாப்பதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் பொலிஸ்மா அதிபர் தரப்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பிக்குகள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் நாம் கலந்துரையாடியுள்ளோம். அமைதியைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் தலையீடும் காணப்படும். எனவே இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமது கனவு அரசியல் பயணத்தை நிறைவு செய்வதற்கு அராசங்கம் ஒருபோதும் இடமளிக்காது.
இதனை பயன்படுத்திக் கொண்டு தமது அரசியல் பயணத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், மக்களை ஒன்று சேர்ப்பதற்கும், கூட்டங்களுக்கு மக்களை வரவழைத்துக் கொள்வதற்கும் எதிர்பார்க்கும் குழுக்களும் உள்ளன. அவற்றுக்கும் நாம் இடமளிக்கப் போவதில்லை. இவ்வாறு ஆரம்பித்து இறுதியில் இரத்த வெள்ளம் வரை சென்ற பல துரிதிஷ;டவசமான சம்பவங்களை கடந்த காலங்களில் அனுபவித்திருக்கின்றோம். எனவே மீண்டும் அது இடம்பெறுவதற்கு இடமளிக்க முடியாது. எனவே தான் குறித்த புத்தர் சிலையை அங்கிருந்து அகற்றுவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர். எனினும் மீண்டும் அங்கு அந்த புத்தர் சிலை பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 26ஆம் திகதி நீதிமன்றத்தின் அறிவிப்பிற்காக அரசாங்கம் என்ற ரீதியில் காத்திருக்கின்றோம்.





