போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அரசியல்பாதுகாப்பு வழங்கப்படாது: ஜனாதிபதி அநுர
உள்நாட்டின் பிரதான விநியோக வலையமைப்பை உடைக்க வேண்டும்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குற்றவாளிகள் கடந்த காலங்களில் அரசியல் தலைவர்களின் ஆதரவில்தான் வளர்ந்தனர் என்பதை நாம் அறிவோம். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும், எந்தவொரு போதைப்பொருள் வலையமைப்பில் சம்பந்தப்பட்டவருக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத ஓர் அரசாங்கம் இப்போது நிறுவப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின்படி மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றுவோம். அதற்காக பாதுகாப்பு படையினர் அச்சமின்றி அவர்களது கடமையை செய்ய வேண்டும். எந்தக் கடினமான சூழ்நிலையிலும் நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
'முழு நாடுமே ஒன்றாக' போதைப்பொருளுக்கு எதிரான தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் 20-11-2025 அன்று தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,
போதைப்பொருள் என்ற இந்த பேரிடரைத் தோற்கடிக்கும் பாதையா அல்லது பழைய அடிமைத்தனமான பாதையா? இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது? இந்தப் பேரிடரைத் தோற்கடிப்பதே நமது தாய்நாடு மற்றும் தேசத்தின் மீதான நமது அசைக்க முடியாத பற்றுதலுக்கு முன்னால் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதையாகும்.
நமது குழந்தைகளும், தாய்நாடும் இந்தப் பேரிடருக்குப் பலியாவதைத் தடுக்கும் பொறுப்பு, பொலிஸார், கடற்படை, இராணுவம், விமானப்படை, மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என நம் அனைவரையும் சார்ந்துள்ளது. இந்தப் பேரிடரிலிருந்து எதிர்கால சந்ததியினரையும் தேசத்தையும் காப்பாற்றுவதே எமது ஒரே இலட்சியமாகவும், உறுதியாகவுமுள்ளது.
ஆயுதமேந்திய இந்தக் குற்றவாளிகளும், போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத் தலைவர்களும் அரசியல் தலைவர்களின் ஆதரவில்தான் வளர்ந்தனர் என்பதை நாம் அறிவோம். ஒரு காலத்தில் பாதாள உலகத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் செயற்குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இன்னொரு காலத்தில், அவர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் இருந்தனர். பிரிதொரு காலத்தில், அவர்கள் அரச தலைவர்களின் பாதுகாப்பில் இருந்தனர்.
நான் பௌத்த பிக்குமார்கள் உள்ளிட்ட சகல மத தலைவர்களுக்கு உறுதியளிக்கிறேன்: எந்தவொரு குற்றவாளிக்கும், எந்தவொரு போதைப்பொருள் வலையமைப்பில் சம்பந்தப்பட்டவருக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத ஓர் அரசாங்கம் இப்போது நிறுவப்பட்டுள்ளது. மக்கள் எங்களுக்கு ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணையின்படி மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றுவதே எங்கள் பொறுப்பாகும்.
சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி, எங்கள் நிகழ்ச்சி நிரலைக் குலைக்க முயற்சிக்கின்றனர். உண்மையான பிரச்சினைகளை மறைத்துவிட்டு, அவர்களாலேயே உருவாக்கப்பட்ட செயற்கைப் பிரச்சினைகளை நோக்கிச் சமூகத்தின் கவனத்தைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். நாம் அந்தக் குழப்பங்களிலும், பொய்களிலும் சிக்கிக் கொள்ள மாட்டோம். உறுதியான இலக்குடன் இந்த நடவடிக்கையைத் தொடருவோம். நிச்சயமாக நாம் இதில் வெற்றி பெறுவோம், இந்தத் தேசத்தைக் காப்பாற்றுவோம்.
இந்த உன்னதப் பணிக்காகப் பெரும் முயற்சி எடுக்கும் கடற்படை, பொலிஸ், இராணுவம், விமானப்படை மற்றும் புலனாய்வுச் சேவைகள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் சீருடையின் கௌரவம், உங்கள் பதவியின் கௌரவம் ஆகியவை எங்கோ இருக்கும் எந்தவொரு குற்றவாளிக்கும் முன்னால் பலவீனமடையவோ அல்லது கரையவோ ஒருபோதும் இடமளிக்காதீர்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் நாங்கள் உங்களைப் பாதுகாப்போம். உங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்குங்கள். நாங்கள் உங்களுக்காக நிற்போம். இது ஒரு கடினமான மற்றும் பாரதூரமான பணி என்பதை நான் அறிவேன். ஆனால் நீங்கள் இந்தக் கடமையை தைரியத்துடன் நிறைவேற்றுவீர்கள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது.
இந்த பேரிடரைத் தோற்கடிப்பதற்கான அரசியல் உறுதிப்பாடு எம்மிடமுள்ளது. அதற்காகத் தேவையான அதிகாரத்துவமும் அதிகாரிகளும் சரியாக வழிநடத்தப்படுவார்கள் என்று நான் நம்புகிறேன். மக்கள் தகவல்களை வழங்குவதற்கு அஞ்சுகின்றனர். அந்த அச்சத்தை போக்கி அவர்களுக்கு நாம் பாதுகாப்பளிக்க வேண்டும். போதைப்பொருள் அற்ற குடும்பம், போதைப்பொருள் அற்ற கிராமம், போதைப்பொருள் அற்ற நகரம், போதைப்பொருள் அற்ற நாடு ஒன்றை நாம் உருவாக்க வேண்டும்.
கைதுகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால் புனர்வாழ்வளிப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களை அமைப்பதற்காக இந்த வரவு செலவு திட்டத்தில் நாங்கள் ஒரு பெரிய தொகையை ஒதுக்கியுள்ளோம். இந்த முயற்சிதான் இந்த நேரத்தில் நமக்குள்ள தேசியப் பணியாகும். பொருளாதாரத்தை, சட்டம் ஒழுங்கை, நல்ல சமூகத்தை, கல்வி, ஆரோக்கியம் மற்றும் நிலையான அரசைக் கட்டியெழுப்புவது குறித்து பேசுவதற்கு முன்னால், நாம் இந்தப் பணியை முடிக்கவில்லை என்றால், அவை அனைத்தும் பலனற்ற முயற்சிகளாக மாறிவிடும்.
எனவே, ஒரு அரசாங்கம் என்ற வகையில், நாங்கள் பெரும் முயற்சி எடுத்து, இந்த நாட்டில் இருந்து இந்தப் பேரிடரை முற்றிலுமாக வேரோடு பிடுங்கி எறிவோம். வெளிநாடுகளிலிருந்து உள்நாட்டில் போதைப்பொருள் வலையமைப்பை நிர்வகிக்கும் அத்திவாரம் அடியோடு அகற்றப்பட வேண்டும். உள்நாட்டின் பிரதான விநியோக வலையமைப்பை உடைக்க வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த இலக்கை நீர்த்துப்போகச் செய்ய, திசை திருப்ப, சதித் திட்டங்களை உருவாக்க, பணம் கொடுத்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் உருவாக்க முடியும். எனவே, இந்தப் பேரிடருக்கு எதிரான போராட்டம் வெறும் குற்றவாளிகளுக்கும், குற்றத்தை எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான போராட்டம் மட்டுமல்ல என்பதை நாம் அறிவோம். அதனுடன் இணைந்த மேலும் சில இயந்திரங்களும், கருவிகளும் உள்ளன. அவையும் அழிக்கப்பட வேண்டும் என்றார்.





