வெகுவிரைவில் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வர்த்தமானி: அமைச்சர் ஹர்ஷன
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினர் சட்ட வரைவினை சமர்ப்பித்துள்ளார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினர் சட்ட வரைவினை சமர்ப்பித்துள்ளார்கள். அந்த வரைவு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்க்கப்படுகிறது.பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 17-11-2025 அன்று நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் வெளிநாட்டலுவல்கள்,வெளிநாட்டு , வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சட்டவாட்சி கோட்பாடு செயற்படுத்தல் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பில் இலங்கை முன்னிலையில் உள்ளது. நீதித்துறை சுதந்திரம் மற்றும் சுயாதீன கணக்காய்வு ஆகியவற்றால் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நீதித்துறையில் ஆளணி பற்றாக்குறை பிரதான பிரச்சினையாக காணப்பட்டது. நீதித்துறைக்கு 2871 பேரை புதிதாக இணைத்துக் கொள்வதற்கு பிரதமர் தலைமையிலான குழு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் தேவைக்காக சட்டங்களை நாங்கள் இயற்றவில்லை. நாட்டு மக்களின் தேவைகளுக்காவே சட்டங்களை இயற்றுகிறோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து புதிய சட்டத்தை இயற்றுவதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவினர் சட்ட வரைவினை சமர்ப்பித்துள்ளார்கள். அந்த வரைவு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிப்பெயர்ப்பு செய்யப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யும் சட்ட வரைவு வெகுவிரைவில் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்படும்.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றுவோம். வழங்கிய வாக்குறுதியை நாங்கள் மறக்கவில்லை. நாட்டு மக்களுக்கு பொருத்தமான வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் அத்துடன் பழமையாக சட்டங்களும் மறுசீரமைக்கப்படும்.
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பல சிறந்த சட்டங்களை இயற்றியுள்ளோம். பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் ஆண்டு முதல் காலாண்டில் பல சட்டங்களை இயற்றுவோம்.
நீதித்துறை கட்டமைப்பை இலத்திரனியல் மயப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.பிரதம நீதியரசர் அதற்குரிய நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொள்கிறார். சட்டம் சிறந்த முறையில் தற்போது செயற்படுத்தப்படுகிறது. அரசியலமைப்புக்கு அமைய நீதித்துறை கட்டமைப்பினர் செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் என்றார்.





