அநுர அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் தீவிரமடைந்துள்ளன: முஜிபுர் எம்.பி.
முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் முறையற்ற வகையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தேசிய கணக்காய்வு திணைக்களத்தில் 30 ஆண்டுகால சேவை அனுபவத்தை கொண்ட பதில் கணக்காய்வாளர் நாயகத்தை நிரந்தரமாக அந்த பதவிக்கு நியமிக்காமல், தமது நண்பனை கணக்காய்வாளராக நியமிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார். கடந்த அரசாங்கங்களை விடவும் இந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகள் தீவிரமடைந்துள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-01-2026 அன்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் முறையற்ற வகையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அந்த விலைமனுக்கோரலில் முறைகேடுகள் காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டு அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் அதே முறைகேடான விலைமனுக்கலை அரசாங்கம் தமது சகாக்களுக்கு வழங்கியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முறையற்ற வகையில் புதுப்பிக்கத்தக்க சக்தி வள திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. இதற்கு பிரபல்யமான முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர் முன்னிலையில் உள்ளார்கள். ஜனாதிபதிக்கு புகழ்பாடி திரிகிறார்கள்.
75 ஆண்டுகால அரசாங்கங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடியை இந்த அரசாங்கத்தில் பல மோசடிகள் இடம் பெறுகின்றன. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சாதாரண உத்தியோகத்தர்கள் மாத்திரமே கைது செய்யப்படுகிறார்கள். ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமாகவுள்ளவர்கள் கைது செய்யப்படுவதில்லை.
பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களுக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவில்லை. கணக்காய்வாளர் நாயகத்துக்கான நியமனம் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளது. தற்போது பதவியில் உள்ள பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனத்தை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை. அவர் கணக்காய்வுத் துறையில் 30 வருடகால அனுபவம் கொண்டவர்.தனது நண்பனை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கவே ஜனாதிபதி முயற்சிக்கிறார்.இது முறையற்றது என்றார்.





