இணையவழி மோசடிகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை: பொலிஸ் ஊடக பேச்சாளர்
ஒரு சிலரிடம் 'வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது' என அச்சுறுத்தி உங்களின் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் OTP, PIN அல்லது கடவுச்சொற்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
நாட்டில் அதிகரித்துவரும் இணையவழி மோசடிகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதி விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் ஊடக பேச்சாளர் எப்.யு.வுட்லர் தெரிவித்தார்.
கொழும்பில் 08-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டில் இணையம் மற்றும் சமூக வலைதளங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடி உள்ளிட்ட ஏனைய குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. ஆகையால் இணையவழி மோசடிகளைத் தடுப்பதற்காக 2026 ஆம் ஆண்டு பொலிஸ்மா அதிபரின் நேரடி வழிகாட்டலில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் நிதி விசாரணைப் பிரிவு ஆகியன இணைந்து விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளன. மோசடியாளர்கள் மிக நெருக்கமான நண்பர்கள் அல்லது நம்பிக்கைக்குரிய நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுகின்றனர்.
குறிப்பாக, 'குறுகிய காலத்தில் இலட்சாதிபதியாகும் வாய்ப்பு', அதிர்ஷ்ட பரிசுகள், வீட்டிலிருந்தே அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு போன்ற விடயங்களைத் தெரிவித்து, வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் ஊடாக மிகவும் தந்திரமாகப் பணம் பறிக்கும் குற்றச்செயலை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிலரிடம் 'வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது' என அச்சுறுத்தி உங்களின் ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் OTP, PIN அல்லது கடவுச்சொற்களைப் பெற்றுக்கொள்கின்றனர். ஆகையால் பொதுமக்கள் தமது வாழ்நாள் சேமிப்பை இவ்வாறானவர்களிடம் இழக்க வேண்டாம்.
இதுபோன்ற தொலைபேசி அழைப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். ஒருபோதும் மூன்றாம் தரப்பினருக்குக் கடவுச்சொற்களை வழங்க வேண்டாம். அவ்வாறு வழங்கியிருப்பின் உடனடியாகச் சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்புகொண்டு உங்கள் கணக்கை முடக்குமாறு அறிவியுங்கள். அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேரடியாகச் சென்றோ அல்லது தபால் மற்றும் மின்னஞ்சல் மூலமோ இது தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க முடியும் என்றார்.





