இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில் வாய்ப்பு: அமைச்சர் விஜித
எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று ரெயின்போ நிறுவன விவகாரம் எமது காலத்தில் அன்றி அக்காலத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். அது அரசியல் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையர்களுக்கு இத்தாலியில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக தற்போதுள்ள உடன்படிக்கையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளதென வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 07-01-2026 அன்று நிலையியற் கட்டளை 27 இன் 2கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பதிலளிக்கையில், கொரியாவில் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு 10,122 பேர் சம்பந்தப்பட்ட இணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் 86 கோடி ரூபா நிதி மோசடி இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் அதனுடன் தொடர்புடைய சிலர் எதிர்க்கட்சித் தலைவருடன் இருந்து பின்னர் அப்போது இருந்த அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர் என்பதை குறிப்பிட வேண்டும்.
அதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டது போன்று ரெயின்போ நிறுவன விவகாரம் எமது காலத்தில் அன்றி அக்காலத்தில் இடம்பெற்ற ஒன்றாகும். அது அரசியல் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றுள்ளது. அந்த விவகாரத்தில் உண்மையாக தொடர்புடையவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதில் எதிர்க்கட்சித் தலைவரிடம் இருந்து மறுபக்கம் தாவிய ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளார். அவர் தொடர்பில் எமது அரசாங்க காலத்தில் சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகிறது.
மேலுத் இவ்வாறான விடயங்களை கையாள்வதற்கு தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் போதுமான பலம் வாய்ந்ததல்ல என்பதனை கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மாற்றி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதே வேளை, தற்போது இத்தாலியில் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அதற்கிணங்க ஒரு மாத காலத்தில் அதனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.





