காற்றழுத்த தாழமுக்கத்தின் நகர்வு பாதையில் மாற்றம்: இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்
இந்த மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கம் 09-01-2026 அன்று நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் நகர்வு பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகளும் இல்லை. எனவே பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்பார்க்கப்பட்ட கன மழை வீழ்ச்சி குறைவாகவே காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் 09-01-2026அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழமுக்கமானது நேற்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்புக்கு கிழக்காக சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. இந்த தாழமுக்கம் நேற்று மாலை 5.30 - 11.30க்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அது பயணிக்கும் பாதையில் மாற்றம் அவதானிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய திருகோணமலை கரையோரத்தின் ஊடாக இப்பகுதி நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும். எனவே எதிர்பார்க்கப்பட்டளவு கடும் மழை வீழ்ச்சி பதிவாகாது. இத்தாழமுக்கம் புயலாக வலுப்பெறுவதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே வடக்கு, வடமத்திய, வடமேல் உள்ளிட்ட மாகாணங்களில் இடைக்கிடை மழை பெய்யும். இந்த மாகாணங்களிலுள்ள சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
இவை தவிர ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இம்மாகாணங்களில் 50 - 75 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும். ஏனைய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும். எவ்வாறிருப்பினும் காற்றின் வேகமானது அவ்வாறே காணப்படுகிறது.
குறிப்பாக மத்திய மழை நாட்டை அண்மித்த பகுதிகளிலும், தென் மாகாணத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்கும் போக்கு குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வரை காணப்படும். மீன்பிடி மற்றும் கடற்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து அம்பாந்தோட்டை வரையான கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு தொடர்ந்தும் அறிவுறுத்தப்படுகிறது. இங்கு மாத்திரமின்றி ஏனைய கடற்பகுதிகளிலும் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொறுத்தமற்றது. இன்று சனிக்கிழமையுடன் மழை வீழ்ச்சி படிப்படியாகக் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் படிப்படியாக பலவீனமடைந்து நாட்டைக் கடந்து செல்லும் என்றார்.





