காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டுக்குள் இன்று பிரவேசிக்கலாம்: வளிமண்டலவியல் திணைக்களம்
அம்பாந்தோட்டை - கல்முனைக்கு இடையில் நாளை (இன்று) மாலை 5.30 - 11.30 மணிக்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் என எதிர்பார்க்கின்றோம்.
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வெள்ளிக்கிழமை அம்பாந்தோட்டை - கல்முனைக்கு இடையில் மாலை 5.30 முதல் இரவு 11.30 மணிக்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்க கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் அதிகரிக்கக் கூடும். அத்தோடு கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் 08-01-2026 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புக்களில் கடந்த சில தினங்களாக ஒரு தலம்பல் நிலை காணப்பட்டது. இந்த தலம்பல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 300 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. எனவே மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடற்பரப்புக்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய அதேவேளை, அலைகள் 2 - 3 மீற்றர் வரை உயரக் கூடிய வாய்ப்புள்ளது. எதிவரும் சில தினங்களுக்கு இந்த நிலைமை காணப்படும். இதனால் கடல் மற்றும் நிலப்பரப்புக்களில் கடும் மழை பெய்யக் கூடிய நிலைமை காணப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது படிப்படியாக கிழக்கு நோக்கி நகர்கின்றது.
இது அம்பாந்தோட்டை - கல்முனைக்கு இடையில் நாளை (இன்று) மாலை 5.30 - 11.30 மணிக்கு இடையில் நாட்டுக்குள் பிரவேசிக்கக் கூடும் என எதிர்பார்க்கின்றோம். இதனால் மழை வீழ்ச்சியும் அதிகரிக்கக் கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக கன மழை எதிர்பார்க்கப்படுகிறது. ஏனைய மாகாணங்களில் 50 - 75 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும்.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டு நிலப்பரப்புக்களிலும் காற்றி வேகம் அதிகமாகக் காணப்படும். மத்திய மலை நாட்டை அண்மித்த பிரதேசங்களில் மேற்கு சரிவுகளிலும் மற்றும் தென் மாகாணத்தில் காற்றின் வேகம் சற்று குறைவாகக் காணப்படும். ஏனைய மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக் கூடும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாட்டுக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, வடமத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சி மிக அதிகமாகக் காணப்படும். இம்மாகாணங்களில் 200 மில்லி மீற்றரை அண்மித்த மழை வீழ்ச்சி பதிவாகலாம். நாளை சனிக்கிழமையுடன் இந்த மண்டலம் படிப்படியாக வலுவிழந்து, ஞாயிற்றுக்கிழமையளவில் முற்றாக செயலிழக்கும் நிலைமையே அவதானிக்கப்பட்டுள்ளது என்றார்.





