குவைத் நோக்கி பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது
குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
கட்டுநாயக்கவிலிருந்து குவைத் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானம், 09-01-2026 அன்று இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்களின் பின்னர் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 8 ஆம் திகதி குவைத் இராஜியத்தின் குவைத் விமான நிலையம் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல் 229 என்ற விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பித்ததன் பின்னர் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானி இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருந்தமையை அறிந்துள்ளார்.
இந்நிலையில் சுமார் 2 மணித்தியாலம் 21 நிமிடங்கள் வான்பரப்பில் பறந்ததன் பின்னர் மேற்படி விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. யு.எல் 229 என்ற இந்த விமானம், வியாழக்கிழமை மாலை 6.44 மணியளவில் குவைத் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் பயணித்தது.
விமானம் வான்பரப்பில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் தொகுதியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார். உடனடியாகக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட விமானிக்கு, பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் திருப்புமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அதற்கமைய செயற்பட்ட விமானி இரவு 9.05 மணியளவில் விமானத்தைப் பாதுகாப்பாகக் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கினார். இதன்போது குறித்த விமானத்தில் 179 பயணிகளும் 8 பணியாளர்களும் இருந்துள்ளனர். அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா, தொழில்நுட்பக் கோளாறுக்குள்ளான விமானத்தின் பயணிகள் அனைவரும் மாற்று விமானங்கள் மூலமாக குவைத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.





