சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும்: ஹர்ஷ டி சில்வா
இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
தித்வா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப்பெற்றுள்ளது. காலம் தாழ்த்தாது சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை அரசாங்கம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 07-01-2026 அன்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, தித்வா புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து விரைவாக மீட்சியடைவதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த திட்டங்களுக்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம்.தேசிய நிதியை மாத்திரம் கொண்டு ஏற்பட்ட விளைவுகளில் இருந்து மீள முடியாது. ஆகவே சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று வலியுத்தினோம்.
சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் அது எப்போது என்று குறிப்பிடவில்லை. உலகில் பிறிதொரு நாட்டில் இயற்கை அனர்த்தங்கள் ஏதும் ஏற்பட்டால் இலங்கை மீதான கவனம் குறைவடையும். ஆகவே இவ்விடயத்தில் விரைவாக செயற்படுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
சட்டத்தின் பிரகாரம் இலங்கையை மீள்கட்டியெழுப்பும் நிதியம் ஸ்தாபிக்கப்படவில்லை. இயற்கை அனர்த்தங்களால் சுமார் 4 பில்லியன் டொலர் அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
ஏற்பட்ட சேதத்தை புனரமைக்க 1200 பில்லியன் ரூபா வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் இலங்கையை கட்டியெழுப்பும் நிதியத்துக்கு இதுவரையில் 7 பில்லியன் ரூபா வரையான நிதியே கிடைக்கப் பெற்றுள்ளது.
இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம் இன்றளவில் சட்டத்தால் நிறுவப்படவில்லை. பல கோடி ரூபா நிதி பரிமாற்றப்படுகிறது. எதிர்காலத்தில் இது பிரச்சினைக்குரியதாக மாறலாம். ஆகவே இந்த நிதியத்தை சட்டத்தால் நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். அதேபோல் அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் அனர்த்த நிவாரண நிதியத்தை ஸ்தாபிக்குமாறும் வலியுறுத்துகிறோம் என்றார்.





