ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
அரச அதிகாரிகளைத் திசைதிருப்பி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதால், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரச சொத்துகளை முறைக்கேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்மார்களான ஜோஹான் பெர்னாண்டோ, ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வத்தளை நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா சில்வா முன்னிலையில் 09-01-2026அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்களான ஜோஹான் மற்றும் ஜெரோம், அத்துடன் சதொச நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் முகமது ஷாகிர் ஆகியோர் பகிரங்க நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
எனினும், அவர்கள் வாட்ஸ்அப் தொழில்நுட்பம் ஊடாக மேலதிக நீதிவானால் அவதானிக்கப்பட்டதாக நீதிவான் அறிவித்தார். ஆறாவது சந்தேகநபரான சதொசவின் முன்னாள் போக்குவரத்து முகாமையாளர் இந்திக ரத்னமலல மாத்திரம் சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கடந்த வாரம் இரண்டாவது சந்தேகநபரான ஜோஹான் பெர்னாண்டோ மற்றும் ஐந்தாவது சந்தேகநபரான ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ ஆகியோருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் முன்வைத்த பிணை கோரிக்கையை நிராகரிப்பதாகவும் நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
சந்தேகநபர்கள நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் அனுரங்க தலைமையிலான குழுவினர் அவர்களுக்கு எதிரான விடயங்களை நீதிமன்றில் முன்வைத்தனர். நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின்படி, 'அஸ்டடிக் ஓவர்சீஸ் லங்கா' என்ற தனியார் நிறுவனம் வாசனைத் திரவியங்களை தயாரிப்பதாகக் கூறி இந்தியாவிலிருந்து எத்தனோலை இறக்குமதி செய்துள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட எத்தனோலைச் சட்டவிரோத மதுபானத் தயாரிப்புக்குப் பயன்படுத்தியதன் மூலம் சுமார் 2 இலட்சத்து 44 ஆயிரம் ரூபா வரி வருமானத்தை அரசுக்கு இழக்கச் செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2012 ஜூன் மாதம் பெல்வத்த தொழிற்சாலையிலிருந்து 40,000 லீற்றர் எத்தனோலைக் கடத்துவதற்குச் ச.தொ.ச. நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி பயன்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சின் கடமை எனப் பதிவேட்டில் பொய்யாகக் குறிப்பிட்டு, சுமார் 15 நாட்கள் அந்த வாகனம் எவ்வித உத்தியோகபூர்வ பதிவுகளுமின்றி இந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ச.தொ.ச. நிறுவனத்தின் ஊழியர் அல்லாத சமன் விதான என்ற நபரை குறித்த லொறியின் சாரதியாக நியமிக்குமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அப்போது இருந்த தலைவருக்குக் கடிதம் மூலம் அழுத்தம் கொடுத்துள்ளார்.
அந்த நபர் பணிக்கு அமர்த்தப்படுவதற்கு முன்னரே அவருக்குச் சதொச நிதியிலிருந்து சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டமை விசாரணையில் அம்பலமானது. அத்துடன், குறித்த நிறுவனம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனுக்குச் சொந்தமான காணியில் இயங்கியுள்ளது. அவர் தனது காணியை முன்னாள் அமைச்சருக்குக் குத்தகைக்கு வழங்கியதாக ஒப்புக்கொண்டுள்ள போதிலும், அங்கு இவ்வாறான எத்தனோல் மோசடி நடந்தமை தனக்குத் தெரியாது என வாக்குமூலம் அளித்துள்ளார்.
அரச அதிகாரிகளைத் திசைதிருப்பி இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதால், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். மன்றில் முன்வைக்கப்பட்ட இருதரப்பு சாட்சியங்களையும் பரிசீலித்த நீதிவான் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்மார்களான ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் உத்தரவிட்டார்.





