யார் என்ன கூறினாலும் கல்வி முறைமையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை அழிக்க முடியாது: ஜனாதிபதி அநுர
உலக வங்கியின் மதிப்பீட்டுக்கமைய 4.1 பில்லியன் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பிள்ளைகள் பாடசாலை செல்வது அவர்களது குடும்பத்துக்கு சுமையாகவுள்ளது. அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். சர்வதேசத்துடன் மோதக் கூடியவாறு கல்வி முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். யார் என்ன கூறினாலும் கல்வி முறைமையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை எவராலும் அழிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய, பதவிய, கெபிதிகொல்லாவ, மிஹிந்தலை, ரம்பேவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு 09-01-2026அன்று இராஜாங்கனை வெவே விகாரைக்கு அருகில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி, ஆட்சியாளர்களின் தவறான பொருளாதார கொள்கைகளால் தான் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேர்ந்தது. அதன் பின்னர் எம்மீது நம்பிக்கை வைத்து எம்மிடம் ஆட்சியைக் கையளித்துள்ளீர்கள்.
எவ்வாறிருப்பினும் எம்மால் இன்னும் முமுமையாக பொருளாதார நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த நாட்டை வழங்கும் பொறுப்பு எம்மிடமுள்ளது.
அது பொருளாதார ஸ்திரத்தன்மையிலேயே தங்கியுள்ளது. நாடொன்று பொருளாதார ரீதியில் பலம் மிக்கதாகக் காணப்படுமானால் ஏனைய அனைத்து துறைகளும் அபிவிருத்தியடையும். அந்த வகையில் நாம் படிப்படியாக பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றோம். 2025ஆம் ஆண்டு அனைத்து துறைகளிலும் நேர்மறையான முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்திலேயே தித்வா புயல் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது.
உலக வங்கியின் மதிப்பீட்டுக்கமைய 4.1 பில்லியன் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எழுந்து கொண்டிருந்த பொருளாதாரத்துக்கு பாரிய ஒரு தாக்கமாகும். அதற்காக பாதிக்கப்பட்ட மக்களை கைவிடுவதற்கு அரசாங்கத்துக்கு எவ்வித உரிமையும் இல்லை. எனவே தான் அந்த மக்கள் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம்.
இதற்காக 50 000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு, விவசாயம் என அனைத்து பாதிப்புக்களுக்கும் இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன. புயல் காரணமாக சுமார் 6000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
அது மாத்திரமின்றி முழுமையாக சேதமடையாவிட்டாலும், மீண்டும் குடியேற முடியாத சுமார் 17 000 வீடுகள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை தொடர்பில் இன்னும் இறுதி அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
அந்த வகையில் புதிதாக 20 000 - 25 000 புதிய வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் இவை தவிர மேலும் 31 000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தனி வீட்டுத்திட்டத்தின் கீழ் 10 000 வீடுகள் நிர்மாணிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
2009இல் யுத்தம் நிறைவடைந்திருந்தாலும் இன்றும் தற்காலிக முகாம்களில் வாழும் மக்கள் உள்ளனர். இவ்வாறான மக்களுக்காக 2500 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ்வாறு 31 000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிட்டிருந்த நிலையிலேயே மேலும் 25 000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாதாரண குடியிருப்புக்களை அமைத்துக் கொடுப்பது எமது நோக்கமல்ல. அவர்களை பாதுகாப்பாக மீள் குடியேற்றுவதே எமது நோக்கமாகும். எனவே தான் அந்த மக்களுக்கு 50 இலட்சம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டது. ஏனைய பாதிப்புக்களுக்கு 5 இலட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. பாதிப்புக்கள் குறைவாக இருந்தாலும் இந்த 5 இலட்சம் ரூபா வழங்கப்படும்.
இவை மாத்திரமின்றி மக்களின் வாழ்க்கை நிலைமையை கட்டியெழுப்புவதற்கு பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி வழங்கப்பட வேண்டும். அதற்கமையவே தற்போது கல்வி மறுசீரமைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இன்று பிள்ளைகள் பாடசாலை செல்வது அவர்களது குடும்பத்துக்கு சுமையாகவுள்ளது.
அந்த நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். சர்வதேசத்துடன் மோதக் கூடியவாறு கல்வி முறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். யார் என்ன கூறினாலும் கல்வி முறைமையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களை எவராலும் அழிக்க முடியாது. நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றினையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.





