வெளிநாட்டு நிவாரண உதவி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான இக்குழு, பல சந்தர்ப்பங்களில் கூடி, நிவாரண நடவடிக்கைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வெளிநாட்டு நிவாரண உதவி (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழு 09-01-2026அன்று பாராளுமன்ற வளாகத்தில் மற்றொரு கூட்டத்தை நடத்தியுள்ளது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடலின் போது, ஏற்கனவே பெறப்பட்ட நிவாரண உதவிகளை விநியோகித்தல், நிர்வாக மற்றும் செயல்பாட்டு சவால்களை நிவர்த்தி செய்தல், உட்பட பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காக சேமிப்பு, விநியோகச் ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய விடயங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் நிவாரண விநியோக வழிமுறைகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய கள விஜயங்களின் போது பெறப்பட்ட கருத்துக்களையும் குழு மீளாய்வு செய்தது. பொருட்கள் முகாமைத்துவ அமைப்பு செயல்படுத்தல் தொடர்பாக டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சு, ஐ.எம்.எஸ். அமைப்பின் விற்பனையாளர் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
இதில் வெளிப்படைத்தன்மை, கண்காணிப்பு திறன் மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், நிவாரணப் பொருட்களின் ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேர கண்காணிப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஐ.எம்.எஸ். அமைப்பின் முழுமையான செயல்பாடு மற்றும் எதிர்கால மேம்பாடுகளுக்கான முன்னேற்ற வழியையும் குழு தெளிவுபடுத்தியது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான இக்குழு, பல சந்தர்ப்பங்களில் கூடி, நிவாரண நடவடிக்கைகள் முழுவதும் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிகபட்ச செயல்திறனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஒருகொடவத்தை களஞ்சிய வளாகம் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் முறையாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
22 வெளிநாடுகள் மற்றும் உலக உணவுத் திட்டம் வழங்கிய நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட சமூகங்களை ஆதரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப உபகரணங்கள் ஆகியவை அடங்கும்.
அத்துடன், பாலங்கள் மறுசீரமைப்பிற்கான சிறப்பு சிவில் பொறியியல் உபகரணங்கள் மற்றும் போக்குவரத்து, விநியோக நபாவடிக்கைகளை மேம்படுத்த வாகனங்களும் சர்வதேச சமூகத்தால் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய உயர்மட்டக் குழு, அனைத்து வெளிநாட்டு உதவிகளும் பொறுப்புடன் நிர்வகிக்கப்பட்டு சமமாக விநியோகிக்கப்படும் என்றும், தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவித்தது.
இந்த கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் மையம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு பிரதி அமைச்சரின் அலுவலகப் பிரதிநிதிகள், ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.





