அர்ச்சுனா எம்.பி. இடையூறளிப்பதாக பிரதி அமைச்சர் கௌசல்யா குற்றச்சாட்டு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மிகவும் கீழ்த்தரமான வகையில் பிரதமர் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காலையில் இருந்து சபையில் கூச்சலிட்டுக் கொண்டு ஏனைய உறுப்பினர்களுக்கு இடையூறாக செயற்படுகிறார்.பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவது மாத்திரம் பணியல்ல என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் வடக்கு மாகாணத்தின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து அர்ச்சுனா கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்றத்தில் 09-01-2026அன்று நடைபெற்ற கடை,அலுவலக ஊழியர் ( ஊழியத்தையும், வேதனத்தையும்,ஒழுங்குப்படுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் திட்டமிட்ட வகையில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஒரு தரப்பினர் குறிப்பாக அரசியல் தரப்பினர் பிரதமர் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார மிகவும் கீழ்த்தரமான வகையில் பிரதமர் மீது விமர்சனங்களை முன்வைத்தார். சைகை மற்றும் வார்த்தை பிரயோகத்தால் பிரதமரை விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா ஆகியோர் இந்த கீழ்த்தரமான செயற்பாட்டை ஏற்றுக்கொள்வாரா,
அதேபோல் எதிர்க்கட்சியின் பெண் உறுப்பினர்களான ரோஹிணி கவிரத்ன, சந்திராணி கிரியெல்ல ஆகியோர் இந்த கீழ்த்தரமான செயற்பாட்டை ஏற்றுக்கொள்வார்களா, பிரதமர் மீதான குற்றச்சாட்டுக்கள் மிகவும் கீழ்த்தரமானது.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காலையில் இருந்து சபையில் கூச்சலிட்டுக் கொண்டு ஏனைய உறுப்பினர்களுக்கு இடையூறாக செயற்படுகிறார்.வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சிறந்த முறையில் செயற்படுகிறார்கள். பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் அர்ச்சுனா அவர்களிடம் கேட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற நிலையியல் கட்டளை புத்தகம் மாத்திரம் பாராளுமன்றத்தின் முழு நடவடிக்கையல்ல, பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவது மாத்திரம் பணியல்ல என்பதையும் அர்ச்சுனா இராமநாதன் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.





