ஐ.நா. உடன்பாட்டை அமெரிக்கா மீறியுள்ளது: அமைச்சர் பிமல் ரத்நாயக்க
நாட்டின் ஜனாதிபதி நல்லவராகவும், கெட்டவராகவும் இருக்கலாம் அவர் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உண்டு.
அமெரிக்காவின் இறையான்மைக்கு எதிராக வெனிசுவேலா ஒருபோதும் செயற்படவில்லை. ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட அரச தலைவரை அமெரிக்கா கைது செய்துள்ளமை ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கை கோட்பாட்டை மீறும் செயற்பாடாகுமென அமைச்சரும், சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 08-01-2026 அன்று நடைபெற்ற மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் கீழான ஒழுங்குவிதிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்தியுள்ளதை ஜனநாயக விரோத செயற்பாடாகும். கட்சி என்ற அடிப்படையில் இதனை கண்டித்து அறிக்கையிட்டுள்ளோம்.
25 ஆண்டுகால ஜனநாயக ஆட்சியை முன்னிலைப்படுத்தி செயற்படும் வெனிசுவேலா பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா, வெனிசுவேலாவுக்கு எதிராக பொருளாதாதார தடை விதித்தது.
2020 -2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவின் தலைமைத்துவத்தில் வெனிசுவேலா முன்னேற்றமடைந்தது.இவரது ஆட்சியில் தான் வெனிசுவேலாவில் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய சேவைகள் இலவசமாக்கப்பட்டன.
நாட்டின் ஜனாதிபதி நல்லவராகவும், கெட்டவராகவும் இருக்கலாம் அவர் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை அந்நாட்டு மக்களுக்கே உண்டு. பிற நாடுகள் வந்து உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாது. 1945 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது.இதன் பின்னர் தான் செல்வந்த நாடுகள் வறிய நாடுகளை ஆக்கிரமிக்கும் கொள்கை இல்லாமல் போனது.
ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி 31 சர்வதேச அமைப்புக்களில் இருந்தும், 35 சர்வதேச திட்டங்களில் இருந்தும் விலகுவதாக குறிப்பிடுகிறார்.இந்த சர்வதேச திட்டத்தில் ' கொழும்புத் திட்டம்' உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.





