அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ் மக்களை புண்படுத்தியுள்ளது: சாணக்கியன் எம்.பி.
புதிய கல்வி மறுசீரமைப்பில் வரலாறு பாடத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்டின் உண்மையான வரலாற்றை பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று தயவுடன் வலியுறுத்துகிறேன்.
அரசாங்கத்தின் கடந்த ஓரிரு வார செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளது.அரசியல் தீர்வுகள் ஊடாகவே இந்த வடுக்கள் ஆறும். வரலாறு பாடத்தில் தமிழர்களின் உண்மையான வரலாற்றை உள்ளடக்க வேண்டும் .அப்போது தான் எதிர்கால தலைமுறையினர் உண்மையை அறிவார்கள்.சமத்துவமாக வாழ்வார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 25-11-2025அன்றுநடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கல்வி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை, தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் பேசினால் சந்தோசமாக இருக்கும்.
புதிய கல்வி மறுசீரமைப்பில் வரலாறு பாடத்தை தெரிவு பாடமாக அறிமுகப்படுத்துவதாக குறிப்பிடப்படுகிறது. இந்த நாட்டின் உண்மையான வரலாற்றை பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று தயவுடன் வலியுறுத்துகிறேன்.
1000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மண்ணை தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்தார்கள், பிரித்தானியர்கள் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை அறிமுகப்படுத்திய போது தமிழ் மக்கள் அதனை ஏற்கவில்லை என்ற வரலாறு, 1926 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த நாட்டில் சமஷ;டி அடிப்படையிலான தீர்வு என்று பண்டாரநாயக்க சொன்ன வரலாறு,
டொனமூர்,சோல்பரி மற்றும் முதலாம்,இரண்டாம் குடியரசு யாப்புக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த வரலாறு,சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளின் வரலாறு ஆகியவற்றை வரலாறு பாடத்துக்குள் உள்ளடக்குங்கள். அவ்வாறு உண்மையை வெளிப்படுத்தினால் தான் எதிர்கால தலைமுறையினராவது சமத்துவத்துடன் வாழ்வார்கள். இல்லையேல் தொல்பொருள் திணைக்களத்தால் எமது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் 100 ஆண்டுகளுக்கும் தொடரும்.
அரசாங்கத்தின் கடந்த ஓரிரு வார செயற்பாடுகள் தமிழ் மக்களின் மனங்களை புன்படுத்தியுள்ளது.அரசியல் தீர்வுகள் ஊடாகவே இந்த வடுக்கள் ஆறும். வரலாறு பாடத்தில் தமிழர்களின் உண்மையான வரலாற்றை உள்ளடக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
தொல்பொருள் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஒருசில ஊடகங்கள் அறிக்கையிடும் முறைமை கவலைக்குரியது. திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் திணைக்களம் முறையற்ற வகையில் செயற்படுகிறது.அரசாங்கத்தின் அணுசரனையுடன் இவ்வாறு செயற்படுகிறதோ, என்ற சந்தேகமும் எழுகிறது.
தொல்பொருள் திணைக்களம் ஏதேனும் பகுதியில் பெயர் பலகைகளை அமைக்கும் போது குறித்த உள்ளுராட்சிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதியில் தொல்லியல் திணைக்களம் உள்ளுராட்சிமன்றத்தின் அனுமதியை பெறாமலேயே பெயர் பலகையை அமைத்துள்ளது.தொல்லியல் திணைக்களம் உள்ளுராட்சிமன்ற சட்டத்தை மீறியுள்ளது. நீதிமன்றத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருசில ஊடகங்கள் போலியான விடயங்களை அறிக்கையிட்டு பிரச்சினைகளை தீவிரப்படுத்துகின்றன. தவறான விடயங்களை சமூகமயப்படுத்துகின்றன. இவ்வாறான தவறான செய்திகளினால் தான் இந்த நாடு இந்த நிலையை இன்று எதிர்கொண்டுள்ளது என்றார்.





