அரசாங்கத்துக்கு எதிராக அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்
பேரணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றன.
'ஊழல் மிக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிரான மாபெரும் மக்கள் குரல்' என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணி 21-11-2025 அன்று நுகேகொடையில் இடம்பெற்றது.
ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் பிற்பகல் 3.45 மணியளவில் சர்வமத வழிபாடுகளுடன் கூட்டம் ஆரம்பமானது. மத வழிபாடுகளைத் தொடர்ந்து பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக உயிர் நீத்த பாதுகாப்பு படையினரை நினைவு கூர்ந்து 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பது.
பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் அதிகரித்து வரும் அரசியல் பதற்றத்தையும் மீறி, இதில் நூற்றுக்கணக்கான மக்கள் வெற்றிகரமாகத் திரட்டப்பட்டனர். அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நிர்வாகத்திற்கு எதிரான கடுமையான எதிர்ப்பை சமிக்ஞை செய்யும் விதமாக, இந்த பாரிய ஆர்ப்பாட்டம் வலிமைமிக்க பொது பலத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
பேரணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்றன. இந்தக் கட்சிகளின் சார்பில் மூத்த அரசியல்வாதிகளான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகியவண்ண, அநுர பிரியதர்ஷன யாபா, டிரான் அலஸ், ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
கூட்டத்தில் கலந்து கொள்ளாத முக்கியஸ்தர்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த கூட்டத்தில் தான் நிச்சயம் பங்கேற்பேன் என கடந்த புதனன்று கொழும்பில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். எனினும் நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியா சென்றமையால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களான ருவான் விஜேவர்தன, அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்ளவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அவர்களில் எவரையும் கூட்டத்தில் அவதானிக்க முடியவில்லை.
கூட்டம் ஆரம்பமாகி சுமார் ஒரு மணித்தியாலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அங்கு வருகை தந்தார். சாமர சம்பத்தின் உரைக்கு மத்தியில் பலத்த கரகோஷத்துடன் அவர் வரவேற்கப்பட்டார். சாமர சம்பத்தை தொடர்ந்து உதய கம்மன்பில, ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்ட சிலர் உரையாற்றியனர். கூட்டத்தின் இறுதியில் உரையாற்றுவதற்காக நாமல் அழைக்கப்பட்ட போது, ஆதரவாளர்களும் அவருடனேயே மேடையேறினர். பின்னர் மேடையில் ஆதரவாளர்களின் மத்தியிலேயே நாமல் உரையாற்றினார்.





