இனவாதத்தை தோற்கடித்து மக்கள் ஒற்றுமைப்பட தயாராகிவிட்டனர்: லண்டனில் ரில்வின்
எம்மீது சேறுபூசுபவர்களை கூட தண்டிப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் வீழ்ச்சியின் அடையாளங்கள் தான் அவையாகும்.
அனைத்தின மக்களும் ஒற்றுமைப்படத் தயாராகியுள்ள நிலையில் பழைய தலைவர்கள் தங்களுடைய அரசியல் இருப்புக்கான இனவாதத்தினை பயன்படுத்தி அவர்களை மீண்டும் பிரிவினைக்கு உட்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் நேற்று முன்தினம் அங்கு நடைபெற்ற 36ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் கடந்தகாலத்தினைப் பற்றி மீளவும் பேசிக்கொண்டிருக்கின்ற தரப்பு கிடையாது. இருப்பினும், எமது தோழர்களின் மரணங்களிலும், தியாகங்களிலும் எழுதப்பட்ட வரலாற்றில் இருந்து நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை எமது எதிர்காலத்தினை வடிவமைப்பதற்கு நிச்சயமாக பயன்படுத்துவோம்.
விசேடமாக, அப்போதைய வலது சாரித்தலைவர்கள் எமது தோழர்கள் மரணிக்கப்பட்ட தருணத்தில் ஆட்டம் முடிந்தது என்று தான் கூறினார்கள். எஞ்சியிருப்பது இரண்டாவது தர அணிதான் அதனால் பயனில்லை என்றும் கூறினார்கள்.
அனைத்தையும் பொறுத்துக்கொண்டு எங்கெங்கெல்லாமே பிரிந்து வாழ்ந்தோம். காடுகளில் ஒழிந்து வாழ்ந்தோம். ஆனால் எமது இலக்கினை ஒருநாள் அடையமுடியும் என்பதில் உறுதியாக இருந்தோம். தற்போது மக்களின் ஆணை மூலமாக நாம் அதிகாரத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றோம்.
மக்கள் எமக்கு ஆணையளித்திருப்பது புதிய சமூகத்தினை கட்டியெழுப்புவதற்கே ஆகும். அந்தப் பயணத்தினை முன்னெடுப்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அந்தப் பயணத்திற்கு எவ்விதமான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றேன்.
அதேநேரம் எமக்கு முன்னால் பலத்த சவால்கள் காணப்படுகின்றன. நாங்கள் பொறுப்பேற்றுள்ள நாடு சதாரணமாக நடத்திச்செல்லக்கூடியதொன்று அல்ல. மிகமோசமான நிலைமையில் உள்ள நாடொன்றை நிர்வகித்து முன்னோக்கி செல்வதற்கு முனைகின்றபோது பலத்த சவால்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கடந்து செல்லவேண்டியது எமது கடமையாகின்றது.
முதலாவதாக காணப்படுவது பொருளாதார ரீதியான சவால்களாகும். குறித்த சவால்களிகளில் இருந்து மீளவேண்டுமாகவிருந்தால் 5சதவீதம் எதிர்பார்க்கப்படுகின்ற பொருளாதார வளர்ச்சி வீதம் 10சதவீதத்திற்கும் அதிகமாக வேண்டும். அதன்போதுதான் வறுமை ஒழிக்கப்படும், திருட்டுச் சம்பவங்கள் நிறுத்தப்படும். இவ்வாறான பல விடயங்கள் உள்ளன.
அடுத்து தேசிய ஒற்றுமைப்பாட்டை உருவாக்க வேண்டும். தேசிய ஒற்றுமைப்பாட்டை திட்டமிட்டே சிதைதத்தார்கள். 1947ஆம் ஆண்டிலிருந்து அதிகாரத்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக அரசியல் தலைவர்கள் இனவாதத்தினை கையிலெடுத்தார்கள். அதனைத்தொடர்ந்து மதவாதத்தினையும் கையிடுத்தார்கள்.
சாதாரணமக்கள் தமது இனம், மதம், மொழி ரீதியாக முரண்பட்டிருக்கவில்லை. ஆனால் தலைவர்கள் அதனைப் பயன்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்தினார்கள். 1983இல் கறுப்பு ஜுலை வன்முறைகளைப் புரிந்தார்கள். அதனை எம்மீது சுமத்தினார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணிக்கும் கறுப்பு ஜுலைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
அதன்பின்னர் நிறைவேற்று அதிகாரஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்தினார்கள். நாங்கள் கிடைத்த சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரத்தினை குறைப்பதற்கு உதவினோம். ஆனால் ராஜபக்ஷவினர் 2019இல் அதிகாரத்துக்கு வந்து மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தினை வலுப்படுத்தினார்கள். இப்போது நிறைவேற்று அதிகாரத்தினை அறிமுகப்படுத்தியவர்கள் சர்வாதிகாரமாகச் செயற்படுவதாக எம்மை விமர்சிக்கின்றார்கள். தனிக்கட்சி முறைமையை கொண்டுவருவதாக கூறுகின்றர்கள். ராஜபக்ஷக்களின் புதல்வர்கள் சர்வாதிகரிகள் என்று எம்மீது பழிபோடுகின்றார்கள். எவ்வளவு வேடிக்கையான விடயமாக உள்ளது.
எம்மைப் பொறுத்தவரையில் அரசியல் விமர்சனங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. பேரணிகளை தடுப்பதில்லை. எம்மீது சேறுபூசுபவர்களை கூட தண்டிப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் அரசியல் வீழ்ச்சியின் அடையாளங்கள் தான் அவையாகும்.
அதேநேரம், மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் எத்தனை தடைகள் வந்தாலும் தேசிய ஒற்றுமைப்பாட்டை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைவதற்கு தயாராகி விட்டார்கள். ஆனால் அந்தந்த இனங்களில் உள்ள தோல்வியுற்ற அரசியல் தலைவர்கள் கடந்த காலத்தைப் போன்றே இனவாதத்தினை கையிலெடுத்து பிரிவினைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றார்கள்.
அவர்கள் முயற்சிகளை மக்களே தோல்வி அடையச் செய்வார்கள். அனைவரும் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை உருவாக்குவோம். அதற்குரிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
கடந்தவாரம், எமக்கு எதிராக எதிரணியினர் போராட்டம் செய்தார்கள். அதனால் நாங்கள் கவலைப்படவிலலை. அவர்கள் பழைய பாணியிலேயே செயற்பட்டார்கள். புதிதாக எந்தவொரு விடயத்தினையும் மக்களுக்கு கூறவில்லை. மக்களை ஏதேவொரு வகையில் ஒன்றிணைத்தார்கள். தங்களது மனக்குறைகளைக் கூறி எம்மை விமர்சித்தார்கள். மகிழ்ச்சியாக வீடு சென்றார்கள் மக்களுக்கு எந்தவிதமான செய்தியும் வழங்கப்படவில்லை.
இவ்வாறு தான் யதார்த்த நிலைமைகள் இருக்கின்றன. திருகோணமலையிலும் இனமுறுகலை ஏற்படுத்தும் முயற்சிகள் தான் எடுக்கப்பட்டன. ஆனால் மக்கள் விழிப்பாக இருந்தார்கள். அதனால் முயற்சி வெற்றி பெறவில்லை.
நாங்கள் வடக்கிற்கு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்றோம். வடக்கில் தெங்கு முக்கோண வலயத்தினை உருவாக்கியுள்ளோம். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். சுற்றுலாத்துறையை நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டில் அனைவரும் சமமானவர்கள் என்பதை உருவாக்குவதோடு கலாசார பரிமாற்றங்கள் பரபரஸ்பரம் மொழிகளைப் கற்றல் உள்ளிட்ட விடயங்களை முன்னெடுக்கவுள்ளோம் இவ்வாறான செயற்பாடுக்ள மூலம் புதிய சமூகதாயத்தினை நாம் உருவாக்குவோம் என்றார்.





