இன, மத வாதத்துக்கு இடமளிக்க வேண்டாம்: ஜனாதிபதி அநுரவிடம் சிறுபான்மை பிரதிநிதிகள் கூட்டாக கோரிக்கை
நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினது விடுதலையை உறுதிப்படுத்தும் அதேவேளை உடனடியாக இலங்கையர் தினத்திலாவது தமிழ் சிறைக்கதி ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பளித்து அவரை எஞ்சியகாலத்தை தனது பிள்ளைகளுடன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இனங்களுக்கான உரிமைகளின் சமத்துவத்தினை உறுதிப்படுத்தும் அதேவேளை இன, மதவாதத்துக்கு எதிராக சிங்கப்பூரில் காணப்படும் சட்டங்களுக்கு இணையான சட்ட ஏற்பாடுகளை உள்நாட்டிலும் தயாரித்து தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஒத்துழைப்புக்களை நாங்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்று சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடத்தில் கூட்டாகத் தெரிவித்தனர்.
அத்துடன், சிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளில் மதங்களின், இனங்களின் பெயரால் கையகப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை மீள உரியவர்களிடம் கையளிப்பதோடு, சட்டவிரேதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் நீண்டகாலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரினது விடுதலையை உறுதிப்படுத்தும் அதேவேளை உடனடியாக இலங்கையர் தினத்திலாவது தமிழ் சிறைக்கதி ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பளித்து அவரை எஞ்சியகாலத்தை தனது பிள்ளைகளுடன் வாழ்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அரசாங்கத்தின் ஏற்பட்டில் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு 'இலங்கையர் தினம்' எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று 22-11-2025 அன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்தனர்.
இக்கலந்துரையாடலில் அமைச்சர் சுனில் செனவி உட்பட, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், வைத்தியர் ஸ்ரீநாத், துரைராசா ரவிகரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகனேசன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் காதர் மஸ்தான், பழனி திகாம்பரம், வைத்தியர் அர்ச்சுனா உள்ளி;ட்டவர்களும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் குறித்த சந்திப்பு சம்பந்தமாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் தெரிவிக்கையில், இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்பதற்கு, நீங்கள் கோரும் ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்குவோம். நாட்டின் அனைத்து இன, மத, மொழி, தனித்துவங்கள் பேணி பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு சமாந்திரமாக, 'இலங்கையர் அடையாளம்' பேணி வளர்க்கப்பட வேண்டும்.
இலங்கையில், அனைத்து பிரிவினருக்கும் இடையில், 'உரிமைகளின் சமத்துவம்' இருக்க வேண்டும். இலங்கை தின கொண்டாட்டங்களின்போது, இலங்கையின் பல்வேறு இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும், முகமாக கலாசார ஊர்வலம் நடத்துங்கள். இலங்கையின் பன்மைத்துவம் பற்றி, முதலில் இலங்கையர் அறிந்துகொள்ள வழி செய்யுங்கள். அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குகின்றோம் என்றார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் தெரிவிக்கையில், இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் தான் இந்நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கின்றது.
இலங்கை சுதந்திரமடையும்போது தனிநபர் வருமானம் 48 டொலர்களாகும். அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 49 டொலர்களாகும். ஆகவே ஜப்பானை விட டொலர் அதிகமாகவே வித்தியாசத்தில் தான் அன்று இருந்தோம்.
தற்போது, இலங்கையையும் ஜப்பானையும் ஒப்பிடும் நாம் இன்னும் பொருளாதார வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றோம், நமது நாடு இனவாதத்தினால் தான் குட்டிச்சுவராகி அதள பாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது.
ஆகவே, இனவாதம் மதவாத்தை பேசும் எந்த நபராக இருந்தாலும் அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும், அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம்.
அத்துடன் பௌத்தம், இஸ்லாம், இந்து மற்றும் கத்தோலிக்க உள்ளிட்ட ஒவ்வொரு மார்க்கத்திற்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை 'இலங்கையர் தினம்' நாளில் மேற்கொள்ள அந்தந்த இன ரீதியான தினைக்களங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 'இலங்கையர் தினம்' என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்கத்தயாராகவே இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, துரைராசா ரவிகரன் எம்.பி. தெரிவிக்கையில், தமிழ் மக்கள் என்றும் நல்லிணக்கத்துக்கு எதிரானவர்கள் அல்லர். நாங்கள் தமிழரசுக்கட்சியாக உங்களுடன் சந்திக்கும்போது பல விடயங்களை கூறியிருக்கின்றோம். அந்த விடயங்கள் சம்பந்தமாக நீங்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். விசேடமாக, தற்போது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதகாரன் 17ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளார்.
தற்போது அவருடைய பிள்ளைகளை பாரமரித்துவந்த பட்டியாரும் மரணத்துவிட்டார். அவர்கள் தனியாக இருக்கின்றார்கள். அந்தப்பிள்ளைகளின் எதிர்காலத்தினைக் கருத்திக்கொண்டு இலங்கையர் தினத்தில் ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பளித்து அரசாங்கம் உண்மையான நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
அவரைத்தொடர்ந்து கோடீஸ்வரன் எம்.பி.வடக்கு , கிழக்கில் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கின்ற நிர்மாணங்கள் மற்றும் கையகப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் ஆகயவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதேபோன்று ஏனைய அங்கத்தவர்களும் குறித்த தேசிய வேலை திட்டத்துக்கு ஆதரவளிப்பதாக கூறப்பட்டுள்ளது.





