கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத போக்குவரத்து சேவை நேரம் தொடர்பில் பிரச்சினை: ஞானமுத்து ஶ்ரீநேசன் எம்.பி. சுட்டிக்காட்டு
ட்டக்களப்பு வலையிறவு விமானசேவை தளத்தில் பாதையொன்று மூடப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத போக்குவரத்து சேவை நேரம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இரவு 11 மணிக்கு கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு புகையிரதம் புறப்படுகிறது. இதனால் பொது பயணிகள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுகிறார்கள்.பழைய நடைமுறையின்படி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 24-11-2025 அன்று நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் போக்குவரத்து,நெடுஞ்சாலைகள்,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வடக்கு மற்றும் கிழக்கில் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து சேவையை முழுமைப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இப்போது சாரதி மற்றும் நடத்துனர் வேலைவாய்ப்புக்காக நேர்முகத் தேர்வுகள் நடக்கின்றன. இந்த பிரதேசங்களை சேர்ந்த இளைஞர்களை இந்த சேவையில் இணைப்பதால் அதனை நிவர்த்தி செய்ய முடியும்.
போக்குவரத்தில் பழைய பேருந்துகள் இயங்குவதுடன்,பேருந்துகளுக்கான தட்டுப்பாடுகளும் நிலவுகின்றன. இதனால் அதனை நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று நெடுஞ்சாலைகளை அமைக்கும் போது பழுதடையாத வகையில் முறையாக அதனை முன்னெடுக்க வேண்டும்.
மட்டக்களப்பு வலையிறவு விமானசேவை தளத்தில் பாதையொன்று மூடப்பட்டுள்ளமை தொடர்பில் அண்மையில் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதன்போது அந்த பாதையை திறந்துவிடவுள்ளதாக கூறப்பட்டது. அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் நடந்துள்ளன. இன்னும் பாதை திறக்கப்படவில்லை. இதனால் அதனை துரிதமாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றேன். அத்துடன் விமான வளாக விஸ்தரிப்பின் போது.காணிகளை இழந்தவர்களுக்கு பதில் காணிகளை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேபோன்று கொழும்பு – மட்டக்களப்பு புகையிரத போக்குவரத்து சேவை நேரம் தொடர்பில் பிரச்சினை உள்ளது. இரவு 11 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படுகின்றது. இவ்வாறு அன்றி பழைய நடைமுறையின்படி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அதன்படி நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.





