சீரற்ற காலநிலை இன்றும் தொடரும்; 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாககக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கடந்த ஓரிரு தினங்களாக நிலவும் அதிக மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உயர்தர பரீட்ரசைக்குத் தோற்றும் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
நிலவும் சீற்றமான வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட, உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எவ்வித தடையுமின்றித் தமது பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கு இராணுவத்தின் உதவி வழங்கப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை நெலுவ நகரில், நெலுவ - தெல்லவ வீதியின் சுமார் 150 மீட்டர் பகுதி சுமார் 3 அடி நீரால் மூழ்கியிருந்தது.
இதனால் அப்பகுதி ஊடான போக்குவரத்துக்கு உதவுவதற்காக இராணுவ டிரக் வண்டிகள் மற்றும் உழவு இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதேவேளை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில், அக்குரஸ்ஸ - சியம்பலாகொட வீதியின் 200 மீட்டர் பகுதி சுமார் 3 அடி நீரால் மூழ்கியிருந்த நிலையில், அப்பகுதி ஊடான போக்குவரத்திற்காக இராணுவ யுனிபஃவல் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இவற்றின் ஊடாக மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய கண்டி, நுவரெலியா, கேகாலை, கம்பஹா, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களுக்கு அதி கூடிய மழை வீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். இப்பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பதுளை, கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





