தமிழ் இனத்தின் இறைவனான மேதகுவுக்கு பிறந்த நாள் வாழ்த்து: ரவிகரன் எம்.பி.
மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை.
எமது மேதகுவின் ஆட்சியில் தமிழர் தாயகப் பரப்பில் கடற்றொழில், விவசாயம் தன்னிறைவடைந்திருந்தன. போதைப்பொருட்கள் இல்லாத பாதுகாப்பான சூழல் இருந்தது. அதனால்தான் அவரை தமிழ் மக்கள் இறைவனாகப் போற்றுகின்றனர் என்று தெரிவித்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழ் இனத்தின் இறைவனான மேதகு வே.பிரபாகரனுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் பாராளுமன்றில் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 26-11-2025 அன்று நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 'ஆழக் கடல் எங்கும், சோழ மகராஜன் ஆட்சிபுரிந்தானே அன்று தமிழீழக் கடலெங்கும் எங்கள் கரிகாலன் ஏறி நடக்கின்றான் இன்று காலை விடிந்ததென்று பாடு சங்க காலம் திரும்பியது ஆடு'இதமிழ் இனத்தின் தேசியத் தலைவனது ஆட்சியை வடக்கு மற்றும் கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பில் வாழ்ந்த தமிழ் மக்கள் இவ்வாறாகத்தான் கொண்டாடினார்கள்.
மேதகுவின் ஆட்சியில் கடலிலே இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களும் அடாவடிகளும் இருக்கவில்லை. சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இருக்கவில்லை. மீனவர்கள் மகிழ்ச்சியாகக் கடற்றொழிலில் ஈடுபட்டனர்.
காணி அபகரிப்புக்களும் இல்லை. எனவே தமிழர் தாயகம் விவசாயத்திலும் செழித்திருந்ததது. போதைப் பொருட்கள் அறவே இல்லை. நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக உலவக்கூடிய நிலையிருந்தது. தாயகப்பரப்பில் மக்கள் தன்னிறைவு பெற்று பாதுகாப்பாக வாழ்ந்தனர்.எனவேதான் தமிழ் மக்கள் மேதகு அவர்களை இறைவனாகவும், அவரது ஆட்சிக் காலத்தினைச் சங்ககாலமாகவும் போற்றுகின்றனர்.
அந்த தமிழ் இனத்தின் இறைவனுக்கு இன்று பிறந்தநாள். இந்த உயரிய சபையிலே மேதகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.





