நாமலின் படிப்பு தொடர்பில் விசாரிப்பதற்கு மேலும் 10 பொலிஸாரை லண்டனுக்கு அனுப்புங்கள்: சாமர சம்பத் எம்.பி.
பொருத்தமான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கதிரையில் நாம் ஒரு சிறந்த தலைவரை அமர்த்துவோம். அதற்கு நபர்கள் யார் என்பதோ அல்லது என்ன கட்சி என்பதோ அவசியமல்ல.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 160 இலட்சம் செலவில் லண்டன் சென்றமை தொடர்பில் விசாரிப்பதற்காக, 320 இலட்சம் செலவில் பொலிஸ் குழுவொன்று அங்கு சென்றுள்ளது. அது மாத்திரம் போதாது. நாமல் ராஜபக்ஷவின் சட்டப்பட்டப்படிப்பு தொடர்பில் விசாரிப்பதற்கு மேலும் 10 பொலிஸாரை லண்டனுக்கு அனுப்புங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
நுகேகொடையில் 21-11-2025 அன்று இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிராகவே பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு கூடி இருக்கின்றனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நாம் தலைவர்களை உருவாக்குவதற்காக இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கின்றோம் என்று யாரும் நினைக்காதீர்கள். ஆனால் பொருத்தமான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி கதிரையில் நாம் ஒரு சிறந்த தலைவரை அமர்த்துவோம். அதற்கு நபர்கள் யார் என்பதோ அல்லது என்ன கட்சி என்பதோ அவசியமல்ல.
வரவு செலவுத் திட்ட உரையை ஒரு மணித்தியாலம் வாசித்த ஜனாதிபதி, மேலும் ஒரு மணித்தியாலயத்தை நாமல் ராஜபக்ஷவை தூற்றுவதற்காக எடுத்துக்கொண்டார். அன்று நாமலை சபையிலிருந்து வெளியேறுமாறு நான் கேட்டுக் கொண்டேன். அவ்வாறில்லை என்றால், அங்கு அங்கிருந்த வெளிநாட்டு தூதுவர் மயங்கி விழுந்திருப்பர். ஜனாதிபதியின் உரை இரவு 10 மணி வரை தொடர்ந்திருக்கும்.
சிறையில் இருந்து நான் எனது பயணத்தை ஆரம்பித்தேன். அதனை இடை நடுவில் கை விட மாட்டோம். 2028 இல் நாமே ஆட்சி செய்வோம் என்று அன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் கூறுகின்றார். ஜனாதிபதியின் இந்த கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று இங்கு நான் உறுதியாக கூறுகின்றேன். தங்காலையில் உயர்தர பரீட்சைகள் இடம் பெறவில்லையா? ஆனால் எமது கூட்டத்தில் அதனைக் காரணமாகக் கூறி ஒலி பெருக்கிகள் நீக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான செயல்களால் ஒருபோதும் அரசியலில் நிலைத்திருக்க முடியாது என ஜனாதிபதியிடம் தெரிவித்துக் கொள்கின்றேன். சுனாமி வரும் வேகத்தில் சென்று விடும். அவ்வாறான சுனாமியில் அடித்து வரப்பட்டவர்களே இன்று தேசிய மக்கள் சக்தியில் உள்ள 159 பாராளுமன்ற உறுப்பினர்களுமாவர். தற்போது நாமலின் சட்ட பட்ட படிப்பை பற்றிய சான்றிதழை தேடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் ரணிலின் லண்டன் விஜயத்தை விசாரிப்பதற்காக ஐந்து பேர் மீண்டும் லண்டன் சென்றுள்ளனர்.
ரணிலின் விஷயத்துக்கு 160 இலட்சம் செலவானது. ஆனால் இவர்களின் விஜயத்துக்கு 320 இலட்சம் செலவாகியுள்ளது. அடுத்து நாமல் ராஜபக்ஷவின் சான்றிதழை உறுதிப்படுத்துவதற்காக 10 பொலிஸ் அதிகாரிகளை லண்டனுக்கு அனுப்புங்கள். தான் பொலிஸ் என கூறும் ஆனந்த விஜயபால பணியாற்றிய பொலிஸ் நிலையமும் இல்லை, வைத்தியர் என கூறும் சுகாதார அமைச்சர் பணியாற்றிய வைத்தியசாலையும் இல்லை.
இவ்வாறு அரசாங்கத்தில் பல போலி வைத்தியர்களும் சட்டத்தரணிகளும் பொலிஸாரும் இருக்கின்றனர். எனவே நாமலின் சட்ட சான்றிதழை தேடுவதற்கு முன்னர் உங்களது பட்டப்படிப்பு சான்றிதழ்களை வெளிப்படுத்துங்கள். எம்மை நீல நிற பஸ்களில் அனுப்புவதாக கூறியவர்களை எமது ஆட்சியில் நாம் சிவப்பு பேருந்தில் அனுப்புவோம் என்றார்.





