கல்வி அமைச்சின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்து விமல் வீரவன்ச சூளுரை
பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட ஆபாச விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பிரதமர் குறிப்பிடுகிறார்.
புதிய கல்வி கொள்கையை அரசாங்கம் உடன் வாபஸ் பெற வேண்டும். பிரதமர் பதவி விலகும் வரை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவேன். புதிய கல்வி கொள்கை நாட்டுக்கு அவசியமற்றது என்பதை வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிள்ளைகளுக்கான பெரியோர் அமைப்பின் உறுப்பினர்களுடன் பத்தரமுல்ல கல்வி அமைச்சின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலகும் வரை சத்தியாகிரக போராட்டத்தை கைவிட போவதில்லை. தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவேன். அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டேன், இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுகிறேன். நான் எழுந்து சென்றாலும், 1000 பேர் வருவார்களென விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச 12-01-2026 அன்று கல்வி அமைச்சின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.
சிறுவர்களுக்கான பெரியோர் அமைப்பினருடன் நேற்று காலை 09 மணியளவில் கல்வி அமைச்சுக்கு முன்பாக வந்த விமல் வீரவன்ச, கல்வி அமைச்சின் முன்பாக உள்ள இலவச கல்வியின் தந்தையான முன்னாள் கல்வி அமைச்சர் சி.டப்ள்யூ.டப்ள்யூ கண்ணங்கரவின் உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை பதவி விலக்க கோரி பொதுமக்களிடம் கையொப்பம் கோரும் மஹஜரில் கையொப்பமிட்டு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதன்போது கருத்து தெரிவித்த விமல் வீரவன்ச, இலவச கல்வியை இல்லாதொழிக்கும் வகையில் அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. பௌத்த மதத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் தரப்பினருடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய புதிய கல்வி கொள்கையை தயாரித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினால் இலவச கல்வி இல்லாதொழியும், மாணவர்களின் எதிர்காலம் சீரழியும். நாட்டின் கலாசாரத்துக்கு எதிராகவே பிரதமர் செயற்படுகிறார். இவர் மேற்குலக நாடுகளின் பிரதிநிதியாகவுள்ளார். இவர் இலங்கைக்கு பொறுத்தமற்றவர். ஆட்சிக்கு வந்த பின்னரும் பாக்கியசோதி சரவணமுத்துவின் அரச சார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதியாகவே செயற்படுகிறார்.
பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட ஆபாச விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாக பிரதமர் குறிப்பிடுகிறார். குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடளிக்க வேண்டிய தேவையில்லை. அவர் கண்ணாடி முன்பாக நின்றால் குற்றவாளியை அறியலாம்.
பிரதமரை விமர்சித்தால் அமைச்சர் லால் காந்த ஆவேசமடைகிறார். இவர் ஆவேசமடைவதற்கான காரணத்தை நாங்கள் நன்கு அறிவோம். கல்வி அமைச்சு பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய விலகும் வரை சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.





