தேசிய பெண்கள் ஆணைக்குழு செயலிழப்பு: ஜனாதிபதிக்கு கடிதம்
பிரத்யேக அலுவலகம் இல்லை. பணியாளர்களோ, தேவையான வளங்களோ இல்லை. அதிகாரபூர்வ முத்திரை கூட இல்லை.
பெண்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து புகார்களைப் பெற்றுக்கொள்வதற்கும், விசாரணைகளை மேற்கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்குமென நியமிக்கப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழுவுக்கு அவசியமான நிதி, அலுவலகம், பணியாளர்கள், ஏனைய வளங்கள் என்பன வழங்கப்படாமல், அது செயலிழந்துள்ளது. இதனூடாக அந்த ஆணைக்குழுவை நியமிக்கும் பொறுப்புடைய நிர்வாகத் தலைவர் என்ற ரீதியில், நீங்கள் அரசியலமைப்பு சார்ந்த உங்களது கடமையை மீறுகிறீர்கள் என சிவில் சமூக அமைப்புக்கள் 10 உம், சிவில் மற்றும் பெண்கள் செயற்பாட்டாளர்கள் 138 பேரும் ஜனாதிபதியிடம் கூட்டாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதியினால் கடந்த ஆண்டின் பின்னரைப் பகுதியில் நியமிக்கப்பட்ட தேசிய பெண்கள் ஆணைக்குழு அவசியமான வளங்களின்றி செயலிழந்திருப்பது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியும், அதன் இயங்குகையை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் அமாலினி டி சேரா, அனீஷா பிர்தௌஸ், பிஸ்லியா பூட்டோ, ரணித்தா ஞானராஜா, சகுந்தலா கதிர்காமர், மெலானி குணதிலக, நபீலா இக்பால் ஆகியோர் உள்ளடங்கலாக சிவில் மற்றும் பெண்கள் செயற்பாட்டாளர்கள் 138 பேரும், மன்னார் பெண்கள் அபிவிருத்திப் பேரவை, கிறிஸ்தவ பெண்கள் குரல் இயக்கம், முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியம் என்பன உள்ளடங்கலாக 10 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கூட்டாக அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மிகமுக்கிய விடயமொன்றை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறோம். இலங்கை முழுவதும் பல்வேறு சமூகங்கள் சார்ந்து இயங்கிவரும் அரசியல் செயற்பாட்டாளர்களான நாம், கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கணிசமானளவினால் அதிகரித்துவருவதைக் அவதானிக்கிறோம். வீட்டிலும், பணியிடங்களிலும், பொது இடங்களிலும், இணைய வழியிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. நீங்கள் தலைமை வகிக்கும் அரசாங்கத்தின் பிரதமருக்கே கூட இணையத்தில் பாலின அடிப்படையிலான அவமதிப்புக்களும், தாக்குதல்களும் நிகழ்ந்துள்ளன. அண்மையில் சுவஸ்திகா அருலிங்கம் உள்ளிட்ட பெண் செயற்பாட்டாளர்கள் பலர் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் இணையத்தில் பாலியல் ரீதியான வார்த்தைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்காக அண்மையில் நீங்கள் நியமித்த தேசிய மகளிர் ஆணைக்குழுவை அணுக முயற்சித்தோம். பெண்களின் உரிமைகள் மீறப்படுவது குறித்து புகார்களைப் பெற்றுக்கொள்ளவும், விசாரணை நடத்தவும், ஆய்வு செய்யவும் அந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அந்த ஆணைக்குழுவைத் தொடர்புகொள்வதற்கு எமக்கு எந்தவொரு வழியும் தென்படவில்லை. இதுபற்றி ஆராய்ந்தபோது அந்த ஆணைக்குழு பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும், நடைமுறையில் அது இயங்கவில்லை எனவும் நம்பகமாக தகவல்கள் கிடைத்தன. அந்த ஆணைக்குழுவுக்கு இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. பிரத்யேக அலுவலகம் இல்லை. பணியாளர்களோ, தேவையான வளங்களோ இல்லை. அதிகாரபூர்வ முத்திரை கூட இல்லை.
அதுமாத்திரமன்றி பெண்கள் செயற்பாட்டாளரான எம்.ஜுவேரியா என்பவரால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போது, உங்களது செயலகம் அந்தக் கோரிக்கையை மகளிர் விவகார அமைச்சின் தகவல் அலுவலருக்கு மாற்றியமைத்துள்ளது. இது தேசிய மகளிர் ஆணைக்குழு ஏற்கனவே ஒரு அமைச்சின்கீழ் கட்டுப்படுத்தப்பட்டு, அதன் சுயாதீனத்துவத்தை வலுவிழக்கச்செய்யும் வகையில் இயக்கப்படுகிறது என்பதற்கான சமிக்ஞையாகவே எமக்குத் தோன்றுகிறது. இது அந்த ஆணைக்குழுவின் நோக்கம், அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை மற்றும் சுயாதீனத்துவத்தை நேரடியாக மீறுகிறது.
இந்த ஆணைக்குழு சமகாலத்தில் பல பெண்கள் முன்னெடுத்த நீண்ட, கடினமான போராட்டங்களின் விளைவாக உருவானதொரு கட்டமைப்பாகும். அதனை நியமிக்கும் பொறுப்புடைய நிர்வாகத் தலைவர் என்ற ரீதியில் தேசிய மகளிர் ஆணைக்குழுவை செயலிழந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் நீங்கள் அரசியலமைப்பு சார்ந்த உங்களது கடமையை மீறுகிறீர்கள். அதன் விளைவாக பெண்களுக்கு எதிரான மனப்பாங்கும், பாலின அடிப்படையிலான பாகுபாடுகளும் சட்டப் பாதுகாப்பின்றி மேலும் பரவலடைவதற்கான சூழலை உருவாக்கும் பொறுப்பும் உங்களிடமே வந்து சேர்கிறது. பெண்கள் என்ற ரீதியிலும், பாலின வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் இந்த அணுகுமுறை எமக்கு மனசாட்சிக்குப் புறம்பானதாகத் தோன்றுகிறது.
எனவே தேசிய மகளிர் ஆணைக்குழுவுக்குப் போதுமான நிதி வளங்கள் மற்றும் பிரத்யேக அலுவலக வசதிகளை வழங்கி, அதனை உடனடியாக இயங்கச் செய்யவேண்டும். அத்தோடு அந்த ஆணைக்குழு மகளிர் விவகார அமைச்சிலிருந்து முழுமையான அரசியல் மற்றும் நிதி சுயாதீனத்துவத்துடன் செயற்படுவதற்கான சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். இந்த நடவடிக்கைகள் எப்போது மேற்கொள்ளப்படும்? தேசிய மகளிர் ஆணைக்குழு எப்போது முழுமையாக இயங்கத் தொடங்கும்? என்பதற்கான தெளிவான காலகட்டத்தையும் நீங்கள் அறிவிக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





